தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக த்ரிஷா வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் ஒரு சிறிய துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த த்ரிஷா அதன் பின்னர் 2002-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான “மௌனம் பேசியதே” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சாமி, கில்லி, ஆறு என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து திரிஷா உச்சம் தொட்டார்.

அதோடு அவரது திறமையான நடிப்பு காரணமாக வெகுவிரைவாகவே பல வெற்றி படங்களில் நடித்தார். அதோடு தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கிலும் கால் பதித்த அவர் தெலுங்கு சினிமாவிலும் வெற்றிகரமான நடிகையாக திகழ்ந்து வந்தார். தற்போது 40 வயதை எட்டியுள்ள த்ரிஷா இன்றளவும் மார்க்கெட் குறையாத முன்னணி நடிகையாகவே இருந்து வருகிறார்.
அவரது நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த “பொன்னியின் செல்வன்” படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு தற்போது அடுத்தபடியாக அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோயின்கள் வந்தாலும் ஒரு சில ஆண்டுகளிலேயே காணாமல் போய் இருக்கிறார்கள். ஆனால் 20 ஆண்டுகள் தாண்டியும் இன்றும் திரிஷாவின் மவுசு தமிழ் சினிமாவில் குறையாமல் இருக்கிறது.

அதேபோன்று தெலுங்கு சினிமாவிலும் அவர் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது 40 வயதான திரிஷா 39 வயதான சர்வானந்திற்கு அம்மாவாக நடிக்கிறார் என்கிற செய்தி வெளியாகி அனைவரது மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியானது உண்மை தகவல் தான். ஆம் கடந்த 2022-ஆம் ஆண்டு மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், மீனா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான “ப்ரோ டாடி” என்கிற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அம்மாவாக நடிப்பதற்கு தான் த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாவுடைய கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க இருக்கிறார். இவர்கள் இருவரின் மகனாக பிரித்விராஜ் வேடத்தில் சர்வானந்த் நடிக்க இருக்கிறார். கதாநாயகியாக தொடர்ச்சியாக கலக்கி வரும் த்ரிஷா தற்போது அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.





