தமிழ் சினிமா, கடந்த சில ஆண்டுகளாக ஏறுமுகத்தில் சென்றுக்கொண்டு இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில், சினிமா இன்டஸ்டரி முடங்கிப் போன நிலையில், சினிமாவின் எதிர்காலம் என்னவாகுமோ, என அச்சப்படும் ஒரு சூழலே நீடித்தது. அதுவும், ஓடிடி தளங்களில் படங்களை ரிலீஸ் செய்யும் அளவுக்கு போனதால், சினிமா தியேட்டர்களை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படுமோ, என்ற சந்தேகமும் உருவானது.
ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இதையெல்லாம் அடித்து நொறுக்கிய தமிழ் சினிமா, இன்று பிளாக்பஸ்டர் படங்களை தந்து, தமிழ் சினிமாவின் பிரகாசமான எதிர்காலத்தை காட்டியிருக்கிறது. விக்ரம், ஜெயிலர், பொன்னியின் செல்வன், லவ்டுடே என பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து, தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் பாய்ச்சியது.
ஆனால், அதே வேளையில் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் அடுத்தடுத்து திடீர் என மறைவதும், தமிழ் சினிமாவில் சோக நிகழ்வாக தொடர்கிறது. தமிழ் சினிமாவில் சாதாரண நடிகராக தன் பயணத்தை துவங்கி, நடிப்பாற்றலால், திறமையால் சாதித்த பல முக்கிய நட்சத்திங்கள் திடீரென ஏதேனும் ஒரு விதத்தில், மறைந்து போவது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது.
கெரோனா காலகட்டத்தில் நடிகர்கள் விசு, விவேக் மற்றும் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் உயிரிழந்தனர். அவர்களை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளில் இயக்குநர்கள் மனோபாலா, டிபி கஜேந்திரன், சுஜாதா, கல்பனா, வினு சக்ரவர்த்தி, சண்முகசுந்தரம், பைரவன், பாலாசிங், வடிவேல் பாலாஜி, தீப்பெட்டி கணேசன், செல்லத்துரை, நெல்லை சிவா, அல்வா வாசு, மாறன், சரத்பாபு என பலரை சொல்லலாம். இவர்களில் சிலர் குணச்சித்திர நடிகர்களாகவும், காமெடி நடிகர்களாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தனர். என்றாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிப்பை இவர்கள் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், எதிர்நீச்சல் சீரியல் மூலம் சகல தரப்பு மக்கள் மத்தியிலும் ஆதி குணசேகரன் ஆக மிக பிரபலமடைந்திருந்த மாரிமுத்து, திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சீரியலுக்காக டப்பிங் பேச சென்ற இடத்தில், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது பிரபல இசையமைப்பாளர், முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனியின் 16வயது மகள் மீரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம், பலரையும் பலத்த அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. மிக நல்ல இசையமைப்பாளராக, நல்ல நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனியின் குடும்பத்தில் நேர்ந்துள்ள இந்த இழப்பு, பலரையும் விரக்தியடையச் செய்துள்ளது. நடிகர் மாரிமுத்து மறைந்த சோகமே மனதை ரணமாக்கிய நிலையில், அதற்குள் மற்றொரு வேதனையா என்ற நிலைக்கு, திரை நட்சத்திரங்கள் தள்ளப்பட்டுள்ளனர்.





