தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டு கால வரலாற்றில் நடிகர் விஜய் பெயரை சொல்லாமல் தவிர்க்க முடியாது. ரஜினி கமல் போன்ற சீனியர் நடிகர்களை எல்லாம் ரசிகர்கள் செல்வாக்கில் முந்திக் கொண்டு சென்றிருப்பவர் நடிகர் விஜய். விக்கிரவாண்டியில் அவர் நடத்திய தவெக மாநாட்டில் திரண்ட லட்சக்கணக்கான ரசிகர் கூட்டமே அதற்கு சரியான உதாரணம்.
தமிழ் சினிமாவில் இருந்து நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வந்தனர். அவர்களும் மக்கள் மத்தியில் புகழ் மிக்கவர்களாக இருந்தும் பல நடிகர்களை அரசியல்வாதியாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உலக நாயகன் என போற்றப்பட்ட கமல்ஹாசனுக்கே உரிய அங்கீகாரம் மக்கள் மத்தியில் அரசியலில் கிடைக்கவில்லை.
எம்ஜிஆருக்கு பிறகு மக்களிடம் வரவேற்பை பெற்ற அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்த் தான். இப்போது அதே ஆராவாரம் பெற்ற ஒரு நடிகராக தலைவராக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நடிகர் விஜய் நிற்கிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் விஸ்வரூபம் தெரிய வரும். மக்களின் செல்வாக்கு என்ன என்பதும் புரிய வரும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கல்லூரி மாணவியர் சிலர், நடிகர் விஜயை அவரது வீட்டுக்கு சென்று நேர்காணல் செய்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விஜய் மிகவும் யதார்த்தமான அந்த மாணவிகள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் ஒரு சம்பவம்தான் அவர் ரயிலில் தாக்கப்பட்ட தகவலை சொல்லி இருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் விஜய் கூறியதாவது, ஒருமுறை நாங்கள் கல்லூரி நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ரயிலில் டூர் சென்றோம். அப்போது எங்களுடன் வந்த சில தோழிகளை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கிண்டலடித்து கலாட்டா செய்தனர். அவர்கள் 4 பேர். நாங்கள் 10 பேர். அதனால் அந்த இளைஞர்களை நாங்கள் அடி வெளுத்து விட்டோம்.
ஆனால் அடுத்த ஸ்டேஷன் வருவதற்குள் எப்படி தகவல் சொன்னார்களோ தெரியாது, 40 பேர் ரயிலுக்குள் வந்து எங்கள் 10 பேரையும் அடி வெளுத்து விட்டனர். இதில் சிலருக்கு புத்தூர் கட்டு போடும் அளவுக்கு நிலமை மோசமாகி விட்டது. அப்புறம்தான் இது பற்றி யோசித்தேன். அந்த 4 பேரை நாங்கள் அடிக்காமல் இருந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது என, அந்த நேர்காணலில் மாணவிகளிடம் வெளிப்படையாக விஜய் பேசியிருக்கிறார்.





