பொதுவாக இன்றைய சமூகத்தில் சில மனிதர்களிடம் ஒரு கெட்ட குணம் இருக்கிறது. அதாவது தன்னை விட பலமடங்கு பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருக்கும் ஏழ்மையானவர்களை பார்த்தால் அவர்களை ஏளனமாக கேவலப்படுத்த தோன்றுகிறது. அவர்களுக்கு தயக்கமின்றி துன்பம் விளைவிக்க மனம் விரும்புகிறது. அவர்களிடம் தங்களது அதிகார திமிரை ஆணவப் போக்கை காட்ட வேண்டும் என்கிற ஒரு வெறி ஏற்பட்டு விடுகிறது.
அப்படிதான் ஒரு மோசமான சம்பவம் சமீபத்தில் நடந்து அது வீடியோ பதிவாக இணையத்தில் வைரலானது. புதுக்கோட்டை – சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் திருமயம் உள்ளது. இங்குள்ள நெய்வாசல்பட்டி என்ற கிராமப் பகுதியில் காட்டுக்குள் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் முதியவர் ஒருவர் கடை வைத்திருந்தார்.
கடை என்றால் மொத்தமாக அதன் முதலீடு 2000 ரூபாய் கூட இருக்காது. ஏழ்மையான அந்த முதியவர் தினசரி கிடைக்கும் 200 ரூபாய் வருமானத்துக்காக அந்த குடிநீர் பாட்டல்கள் மோர் முறுக்கு சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் அடங்கிய அந்த கடையை வைத்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
அப்போது அந்த பகுதிக்கு பைக்கில் வந்த திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முதியவரின் கடையை பார்த்தவுடன் டென்சாகி அந்த கடையை அடித்து உதைத்து சேதப்படுத்தினார். பெஞ்சுகளை அங்கிருந்த பொருட்களை எல்லாம் எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இதையடுத்து முதியவரிடம் அராஜகமாக நடந்துக்கொண்ட அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி போலீஸ் ஐஜி பாலகிருஷ்ணன் உடனடியாக உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்தார். திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஏற்கனவே எஸ்பியாகவும் கமிஷனராகவும் பணிபுரிந்த ஐஜி பாலகிருஷ்ணன் போலீசாரின் இதுபோன்ற வரம்பு மீறிய செயல்களுக்கு உடனடியாக கடும் நடவடிக்கைகளை எடுத்து மக்களின் பாராட்டுகளை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காந்தி கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் கேபிஒய் பாலா பாதிக்கப்பட்ட அந்த முதியவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு தனது செலவில் சொந்தமாக ஒரு ஜூஸ் கடை வைத்தும் கொடுத்திருக்கிறார். மேலும் அவருக்கு தேவையான பண உதவியும் கேபிஒய் பாலா செய்திருக்கிறார். ஏற்கனவே இப்படி பலருக்கு உதவி செய்து மக்கள் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றவர்தான் கேபிஒய் பாலா. தற்போது பாதிக்கப்பட்ட முதியவருக்கு அவர் செய்த உதவி இணையத்தில் வைரலாகி வருகிறது.





