தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத் தலைவராக நடிகர் விஜய் இப்போது மக்கள் சந்திப்பு பயணத்தை துவங்கியிருக்கிறார். நேற்று திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக மக்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய் தொடர்ந்து நேற்றிரவு அரியலுாரிலும் மக்களை சந்தித்து பேசினார். ஆனால் பெரம்பலூரில் நேரமின்மை காரணமாக அவர் மக்களை சந்தித்து கையசைத்து விட்டு மட்டுமே சென்றிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் திருச்சி மற்றும் அரியலூரில் மக்கள் மத்தியில் பேசியதாவது, கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக தரப்பில் 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தீங்க சிஎம் சார். ஆனால் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றலை சார். எதைச் சொன்னாலும் உங்களிடமிருந்து பதில் வராது சிஎம் சார். மை டியர் சிஎம் சார். உங்களை பாசமா அழைத்தாலும் உங்களுக்கு பிடிக்காது.
திமுகவை சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடந்துள்ளது. பெண்களை பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதித்து விட்டு ஓசி ஓசி என்று கேவலமாக சொல்லிக் காட்டுகின்றனர். அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் தரவில்லை. ஆனால் சிலருக்கு கொடுத்ததை சொல்லிக் காட்டுகின்றனர்.
கல்வி மின்சாரம் மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை ஆட்சிக்கு வந்தால் நாங்கள் செய்து கொடுப்போம். பெண்கள் பாதுகாப்பிலும் சட்டம் ஒழுங்கு பிரச்னையிலும் நோ காம்ப்ரமைஸ். மணல் மாபியா கூட்டம் தமிழகம் முழுக்க இருக்கிறது. அதில் பெரும் பங்கு திமுகவினருக்கும் இருக்கிறது. துறையூரை சேர்ந்த திமுக நிர்வாகி செம்மண் விவகாரத்தில் கைதானதே இதற்கு ஆதாரம்.
திருச்சி மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இருந்தும் என்ன பிரயோஜனம்? மாவட்டத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. வரும் தேர்தலில் இவர்களுக்கு ஓட்டு போடுவீர்களா? திமுகவுக்கு தேர்தலில் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். முடியாததை எல்லாம் தேர்தல் வாக்குறுதியாக தவெக தராது. எதெல்லாம் சாத்தியமோ அதை மட்டுமே கொடுப்போம்.
மக்களின் அன்புக்காக மட்டுமே பெரிய வருமானத்தையும் வசதியையும் தூக்கி எறிந்து விட்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். உங்கள் பாசம்தான் எனக்கு பெரியது. வேணும்கிற அளவுக்கு பணத்தைப் பார்த்தவன் இந்த விஜய் என்று அவர் பேசியிருக்கிறார். மேலும் மறைந்த ஜெயலலிதா பாணியில் தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பிட்டு சொன்னாங்களே செஞ்சாங்களா என்று கேள்வி எழுப்பி நடிகர் விஜய் பேசியது மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றிருக்கிறது.





