நடிகர் விஜய் இப்போது அரசியல் களத்தில் பரபரப்பான ஒரு தலைவராக பார்க்கப்படுகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக அடுத்த முதல்வர் அவர்தான் என்று பெரும்பாலானவர்கள் சொல்லும் அளவுக்கு அவரது செல்வாக்கும் மக்கள் ஆதரவும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை மறுதினம் தமிழகத்தில் 62 ஓட்டு எண்ணும் மையங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ஒரு தரப்பில் திமுக ஜெயிக்கும் என்றும் ஒரு தரப்பு அதிமுக ஜெயிக்கும் என்றும் கூறிய நிலையில் இந்தியா டுடே தனது கருத்துக்கணிப்பில் தவெக ஜெயிக்கும் என்றும் கூறியிருக்கின்றன.
ஆனால் தவெக தலைவர் விஜய் கட்சி பொதுக்கூட்டங்களை நடத்திய போதும், மாநாடுகளை நடத்திய போதும், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட போதும் திரண்ட மக்கள் கூட்டமும் அவர்கள் காட்டிய ஆரவாரமும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் வெறும் நடிகராக விஜயை பார்க்க வந்த கூட்டமாக தெரியவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் உறுதியாக கூறினர்.
அத்துடன் மணிக்கணக்கில் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்த மக்கள் கூட்டம், விஜயின் பிரசார வாகனத்தின் பின் திரண்டு வந்த மக்களின் ஆராவாரமும் சாதாரணமானது இல்லை என்றும் அவர்கள் கூறினர். இந்த சூழலில் தேர்தலுக்கு பிறகு நடிகர் விஜய் திருச்செந்தூர் மற்றும் ஷீரடி சாய்பாபா கோவில்களுக்கு சென்று இறைவழிபாட்டில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று வேளாங்கண்ணி மாதா கோவிலிலும் அடுத்து நாகூர் பாபா கோவிலிலும் நடிகர் விஜய் சிறப்பு பிரார்த்தனை செய்ய திட்டமிட்டு இருந்தார். ஆனால் இதுகுறித்து தகவலறிந்த மக்கள் வேளாங்கண்ணி ஆலயம் முன்பு ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர். மேலும் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் வரத் துவங்கி விட்டது.
இதையடுத்து நடிகர் விஜய் தனது வேளாங்கண்ணி கோவில் நாகூர் பாபா கோவில்களுக்கு செல்லும் ஆன்மிக பயணத்தை திடீரென ரத்து செய்தார். ஏனெனில் தேர்தல் முடிவு நாளை மறுதினம் வெளியாக உள்ள நிலையில், இந்த பயணங்களின் போது மக்கள் கூட்டம் நெரிசல் அதிகரித்து ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த பயணத் திட்டத்தை அவர் உடனடியாக ரத்து செய்ததாக கூறப்படுகிறது.





