தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் விஜய் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவர் நடித்த ஜனநாயகன் படம் திரைக்கு வராமல் சென்சார் பிரச்னையில் முடக்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றம் மேல் முறையீட்டு வழக்கில், தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் இப்போது சென்றுவிட்டது. வரும் திங்களன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டுதோறும் வருமான வரியை செலுத்தி வருகிறார். கடந்த 2016 – 17 நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தார். அதில் அவர் அந்த ஆண்டுக்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று அந்த கணக்கில் கூறியிருந்தார்.
ஆனால் அவர் புலி என்ற படத்தில் நடித்ததற்காக 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதை அந்த வருமான வரி கணக்கில் காட்டாமல் நடிகர் விஜய் மறைத்து விட்டதை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி கண்டுபிடித்தனர். இதையடுத்து நடிகர் விஜய்க்கு 1 கோடி 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித்துறை கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அபராத தொகைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ஏபி சீனிவாஸ் இந்த வழக்கு குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த அபராத தொகை கால தாமதமாக விதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறுவது சரியல்ல. அவர்கள் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை விஜய் தரப்பில் அணுகினார்கள். தீர்ப்பாயம் உத்தரவிட்ட பின்னர் இந்த அபராதத்தை வருமான வரித்துறை விதித்துள்ளது. இதில் தவறு எதுவும் இல்லை என்று வாதிட்டார். இதையடுத்து இந்த விசாரணையை வருகிற 23ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.





