வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல், வழக்கத்தை விட இந்த முறை அதிக பரபரப்பு நிறைந்த தேர்தல் களமாக இருக்கப் போகிறது. ஏனெனில் விஜயகாந்துக்கு பிறகு, மக்கள் ஆதரவுள்ள ஒரு நடிகராக விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவராக இந்த தேர்தலை சந்திக்க உள்ளார்.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் விக்கிரவாண்டியில் அவர் நடத்திய அரசியல் மாநாட்டுக்கு திரண்டு வந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டம், விஜய்க்கு உள்ள மக்கள் செல்வாக்கை பிரகடனப்படுத்தி விட்டது. தேர்தல் களத்தில் கமல் போல விஜயும் ஒருவராக அரசியலில் இருக்கப் போவதில்லை. அவரது வருகை வேற லெவலில் இருக்கும் என்பதை அப்பட்டமாக காட்டி விட்டது.
நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். பையனூரில் உள்ள ஷூட்டிங் ஸ்டுடியோவில் நடந்து வரும் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. அதற்கு பிறகு 10 நாட்கள் விஜய் பிரேக் எடுத்துக்கொள்கிறார். புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் வருவதால் இந்த இடைவெளியில் அவர் ஓய்வு எடுக்கிறார்.
அதன்பிறகு வருகிற ஜனவரி மாதம் துவங்கி தொடர்ந்து 45 நாட்களுக்கு மீண்டும் அதே பையனூரில் உள்ள ஸ்டுடியோவில் தளபதி 69 படப்பிடிப்பு நடக்கிறது. அத்துடன் ஷூட்டிங் நிறைவடைகிறது. அதாவது அக்டோபர் 5ம் தேதி துவங்கிய இந்த படப்பிடிப்பு, 2025ம் ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் நிறைவடைய உள்ளது.
படப்பிடிப்பை முடித்து விட்டு நடிகர் விஜய், தனது அரசியல் களத்தில் முழுவீச்சில் இறங்குகிறார். தளபதி 69 படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள், ரிலீஸ் உள்ளிட்ட இதர பணிகளை அந்த படத்தின் இயக்குனர் எச் வினோத் கவனித்துக்கொள்கிறார். தளபதி 69 ரிலீஸ் 2025 தீபாவளிக்குதான் என்பதால் 7 மாதங்கள் வரை நீண்ட கால அவகாசமும் உள்ளது.
அதனால் வருகிற 2025ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மாவட்டம் வாரியாக நேரில் செல்கிறார். தொகுதி வாரியாக சென்று, மக்களை நேரடியாக சந்தித்து பேசுகிறார். மக்கள் மத்தியில் இன்னும் தனது கட்சிக்கு ஆதரவு திரட்ட உள்ளார். தனது கட்சி உறுப்பினர் சேர்க்கையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.





