தமிழ் சினிமாவில் எதிரும் புதிருமாக போட்டியாளர்களாக இருப்பவர்கள் விஜய், அஜீத். 1990களில், தமிழ் சினிமாவுக்குள் வந்த அவர்கள், நாளடைவில் முன்னணி ஹீரோக்களாக மாறி, அவர்களுக்கு என லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகி விட்டனர். இன்று தமிழ் சினிமாவில் அஜீத் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் என, இரு தரப்புகளும் போட்டியாளர்களாக தங்கள் நட்சத்திரங்களை கருதுகின்றனர்.
இதே போல் ஒரு காலகட்டத்தில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல் என்ற போட்டி நிலை இருந்தது. இப்போதும் ரஜினி கமல் என்ற போட்டி இருக்கவே செய்கிறது. ஆனால், அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதே போல் அஜீத் விஜயும் தங்களை நண்பர்களாக தான் காட்டிக் கொள்கின்றனர். ரசிகர்கள் தான் மோதிக் கொள்கிறார்களே தவிர, அவர்கள் ஒருவரை ஒருவர் மதித்து, பரஸ்பரம் நல்ல கருத்து பரிமாற்றங்களோடு நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
நடிக்க வந்த புதிதில், விஜய் – அஜீத் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இருவரும் நண்பர்களாக நடித்திருப்பர். ஒரே அறையில் தங்கி இருக்கும் நண்பர்களாக அவர்கள் நடித்த அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அப்படி வெற்றி பெற்று இருந்தால், பல படங்களில் அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கும்.
இப்போது விஜய், வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் நடித்து வருகிறார். அஜீத்குமார், வெளிநாட்டில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், தல படத்தில் தளபதி நடிக்கிறார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. அதுவும் விஜய் 68 படத்தை முடித்த பிறகு, விஜய் 69 படத்தில்தான் தல படத்தில் விஜய் நடிப்பதாக அவரது அம்மா ஷோபா சந்திரசேகரே தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
கிரிக்கெட் உலகில் தல என அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி. இவர் தனது மனைவி பெயரில், சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவக்கி இருக்கிறார். ஹரீஸ் கல்யாண் – இவானா நடித்த எல்ஜிஎம் படத்தை, தோனி பட நிறுவனம்தான் தயாரித்தது. இதே போல், தோனி தயாரிப்பு நிறுவனத்தில், விஜய் நடிப்பாரா என, எக்ஸ்சில் (டிவிட்டரில்), ஒரு ரசிகர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதாவது, தல படத்தில் தளபதி நடிப்பாரா என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு பதிலளித்த ஷோபா சந்திரசேகர், விஜய் 69 என பதில் அளித்திருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதன்மூலம் ஷோபா சந்திரசேகர் பதில் கூறியிருப்பதால், தோனி படத் தயாரிப்பு நிறுவனத்தில் விஜய் நடிக்க உறுதி செய்யப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. வெங்கட் பிரபு படத்தை முடித்த பிறகு இந்த படத்தில் விஜய் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.





