தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை நடத்தி வரும் நடிகர் விஜய், வருகிற 13ம் தேதி முதல் மாவட்டம் வாரியாக நேரில் சென்று மக்களை நேரடியாக சந்திக்கும் விதமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக திருச்சியில் உள்ள சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தனது சுற்றுப் பயணத்தை துவக்க திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு அவர் செல்ல இருக்கிறார்.
இதற்காக சில தினங்களுக்கு முன்பு, திருச்சி வந்த தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் தவெக கட்சியினர் விமான நிலையத்துக்கு முன் இருந்த ஒரு கோவிலுக்கு சென்றனர். அப்போது அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாக கூறி தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் தவெக நிர்வாகிகள் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இது தவெக கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகிவரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக் கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.
மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும்கட்சி யாருக்கு பயப்படுகிறதோ இல்லையோ தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு பயத்தின் உச்சியில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது. தேர்தல் பிரச்சார பயணம் என்பது அனைத்து கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயக பூர்வமான பிரதான நடவடிக்கைதான்.
மற்ற கட்சிகளில் இது போன்ற நடவடிக்கைகளை சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளை கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றிய சிந்திக்கின்றனர்.
அதனால் காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் திருச்சியில் நமது கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அந்த பதிவில் நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.





