தமிழக அரசியல் களத்தில் முழுவீச்சில் இறங்கி செயல்பட்டு வரும் நடிகர் விஜய், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் மக்களை நேரடியாக சந்திக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மேற்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்ட ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடந்தது.
நடிகர் விஜய்க்கு விக்கிரவாண்டியில் நடந்த கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கிடைத்த வரவேற்பை போலவே மதுரையில் நடந்த 2வது மாநில மாநாட்டிலும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் ஆதரவும் கிடைத்திருக்கிறது. மாற்று கட்சியினர் மட்டுமே நடிகர் விஜய் குறித்த விமர்சனங்களை வைக்கும் நிலையில் நடுநிலையாளர்களும் பொதுமக்களும் விஜய்க்கு வரவேற்பும் ஆதரவும் தந்து பேசி வருகின்றனர்.
இந்த சூழலில் அடுத்ததாக கோவையில் தவெக கட்சியின் 3வது மாநில மாநாட்டை நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டிருக்கிறார். அதுவும் வருகிற அக்டோபர் மாதமே அந்த மாநாடு நடத்தப்பட வேண்டும் என்றும் கட்சியினரிடம் பேசியிருக்கிறார். இதற்கிடையே மக்களை சந்திக்கும் சுற்றுப் பயணத்தையும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட பிரசார வேன் தயார் செய்யப்பட்டு, தவெக தலைமை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில்தான் நடிகர் விஜய் நேரில் வந்து மக்களை சந்திக்க இருக்கிறார். மக்களின் குறைகளை நேரடியாக கேட்கவும் மனுக்களை பெற்றுக்கொள்ளவும் அவர் முடிவு செய்திருக்கிறார்.
இன்னும் தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்தவும் அனைத்து தரப்பு மக்களிடமும் கட்சியின் செயல்பாடுகளை கொண்டு சேர்க்கடும் நடிகர் விஜய், தவெக கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கவும், மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரவும் அறிவுறுத்தி உள்ளார்.
தவெக தலைவர் விஜய் இதுகுறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிய அறிக்கையில், வீடு வீடாகச் சென்று தவெக உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும். மக்கள் பிரச்னைகளை நேரடியாக கேட்டு தவெக தலைமையகத்துக்கு லிஸ்ட் அனுப்ப வேண்டும். தொகுதி ரீதியாக இருக்கக்கூடிய அனைத்து பிரச்னைகளையும் கேட்டறிந்து அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்று தவெக மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.





