நடிகர் ஜெயம் ரவி, சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன். மூத்த மகன் மோகன் ராஜா, இயக்குனராக உள்ளார். ஜெயம் தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கியவர் மோகன் ராஜாதான். இந்த படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடித்திருந்தார். தனி ஒருவன் 2 படமும் உருவாக்கும் திட்டம் அண்ணன், தம்பி இருவருக்கும் உள்ளது.
கடந்தாண்டில் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த நடிகர் ரவி மோகன், சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இருவரையும் சமரச பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்ட நிலையில், விவாகரத்து என்ற முடிவில் ஜெயம் ரவி உறுதியாக உள்ளார்.
இந்நிலையில் ஜெயம் ரவி நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. இறைவன் அகிலன் சைரன் 108 மற்றும் பிரதர் என கடைசியாக ரவி மோகன் நடிப்பில் வெளியான 4 படங்களுமே படுதோல்வியை சந்தித்திருக்கின்றன. இன்று அவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை படம் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. கிருத்தி உதயநிதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, நித்யாமேனன் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். ஏற்கனவே வணக்கம் சென்னை காளி படங்களை இயக்கிய நிலையில், 3வதாக இந்த படத்தை கிருத்திகா உதயநிதி டைரக்ட் செய்திருக்கிறார். காதலிக்க நேரமில்லை படம் இன்று ரிலீஸான நிலையில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் ஜெயம் ரவி, இனிமேல் எனது பெயர் ஜெயம் ரவி இல்லை, ரவிமோகன் என்று இனி எல்லோரும் என்னை அழையுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் இத்தனை ஆண்டுகளாக ஜெயம் ரவி என அழைக்கப்பட்டவர், ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்தவர் இனி ரவி மோகன் என்று அழைப்பது சாத்தியப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மனைவியை பிரிந்து புது வாழ்க்கை வாழ விரும்பும் ரவி மோகன், தனது பெயரின் முன்பகுதியை நீக்கியதோடு இனி எல்லாமே புதிய பார்வையில், புதிய பாதையில் புதிய பயணத்தில் தன் வாழ்க்கையை தொடர திட்டமிட்டுள்ளார். ஆனால் அதற்காக ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என மாற்றி தான் செய்ய வேண்டுமா, யாரோ புதியவர் போல அந்த பெயரை கேட்டால் தோன்றுகிறதே என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.





