வருகிற 23ம் தேதி தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த முறை திமுக கூட்டணி அதிமுக கூட்டணி தமிழக வெற்றிக் கழகம் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டிகள் நிலவுகிறது. இதில் ஆளுங்கட்சி திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியே என்று விஜய் தொடர்ந்து பேசி வருகிறார்.
கடந்த ஒரு மாதமாகவே நடிகர் விஜய் பங்கேற்கும் தவெக பிரசாரக் கூட்டங்கள் ரோடு ஷோ அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன. இன்று பெரம்பூரில் வீடு வீடாகச் சென்று அந்த தொகுதியின் வேட்பாளரான விஜய் மக்களை சந்திப்பதாக இருந்தது. இப்போது அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலூரிலும் அவரது பிரசாரம் 3வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.
தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை. திசை திருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது.
இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு.
தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது என்று தவெக தலைவர் விஜய் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





