பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் 910 நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய், பரந்தூருக்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்தார்.
அப்போது நடிகர் விஜய் பேசியதாவது, பரந்தூரில் விமான நிலையம் கூடாது என்று ராகுல் என்ற சிறுவனின் உருக்கமான பேச்சை வீடியோ ஒன்றில் கேட்ட பின்பு தான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தேன். அந்த சிறுவனின் பேச்சு என் மனதை உலுக்கி விட்டது.
1000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களையும் 13 நீர்நிலைகளையும் அழிக்கும், சென்னையை மேலும் பாதிக்கும் இந்த பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஏற்கனவே தவெக கட்சி மாநாட்டில் தீர்மானத்தில் கூறி இருந்தோம். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை, விமான நிலையம் வருவதை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் இந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். விவசாயிகள் பாதிக்கப்படாத இடங்கள், பாதிப்புகள் குறைவாக உள்ள இடங்களை தேர்வு செய்து அங்கு விமான நிலையத்தை அமைத்துக் கொள்ளுங்கள். இங்குதான் விமான நிலையம் வரவேண்டும் என்பதால் ஆட்சியாளர்களுக்கு ஏதேனும் லாபமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தது, காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது, இப்போது ஆட்சிக்கு வந்த பின் பரந்தூரில் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறீர்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக மாறியதும் விவசாயிகளுக்கு எதிர்ப்பா?
ஆனால் மக்கள் நம்பும்படி நாடகமாடுவதில் நீங்கள் கில்லாடிகளாச்சே, இனி உங்கள் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். இனி சும்மாவும் இருக்க மாட்டார்கள். நான் ஏகனாபுரம் ஊருக்குள் வந்து மைதானத்தில் மக்களை சந்திப்பதாக தான் இருந்தது. ஆனால் எனக்கு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஊருக்குள் வர எனக்கு ஏன் தடை என தெரியவில்லை. அடுத்த முறை வரும்போது உங்கள் ஊருக்குள் வந்து உங்களை சந்திக்கிறேன் என்று விஜய் பேசி இருக்கிறார்.





