தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர் விஜய், இப்போது தமிழக அரசியலிலும் உச்சத்தை தொடும் இலக்கில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி, பயணித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 2ம் தேதி தனது கட்சி பெயரை அறிவித்து, அரசியல்வாதியாக தன் முகத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து ஆகஸ்ட் 22ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய விஜய், கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். பல லட்சம் பேர் பங்கேற்ற இந்த மாநாடு கோலாகலமாக நடந்தது.
விஜய் நடத்திய இந்த மாநாட்டில் திரண்ட மக்கள் கூட்டம் ஒருபுறம் ஆச்சரியப்படுத்தியது என்றால், மறுபுறம் விஜயின் 48 நிமிட பேச்சு மக்களை அதிசயப்பட வைத்தது. இப்படி கூட விஜய் பேசுவாரா என்று யோசிக்கும் அளவுக்கு ஒரு அரசியல்வாதியாக மேடையில் விஜய் பொளந்து கட்டினார். தன்னனை பற்றிய விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி தந்தார்.
குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசையும், மாநிலத்தை ஆளும் திமுக அரசையும் சகட்டுமேனிக்கு வசைபாடினார். ஊழல் ஆட்சி நடத்தும் குடும்ப அரசியலை முதலில் வெளியேற்ற வேண்டும் என்று நேரடியாகவே திமுகவை பற்றி பேசினார். திமுக தான் என்னுடைய அரசியல் எதிரி என்றும் பிரகடனப்படுத்தி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அரசியல் மாநாட்டை தொடர்ந்து இப்போது தளபதி 69 படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளும் விஜய், தொடர்ந்து 45 நாட்களுக்கு ஷூட்டிங்கில் பிஸியாக நடிக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் இரண்டு கட்ட மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதில் மாவட்டம் வாரியாக பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து தனது தவெக கட்சிக்கு ஆதரவு திரட்டுகிறார்.
வருகிற டிசம்பர் மாதம் 27ம் தேதி விஜய் இந்த மக்கள் சந்திப்பு பயணத்தை ஆரம்பிக்கிறார். கோவையில் இருந்து இந்த பயணத்தை துவங்கி திருப்பூர். ஈரோடு, சேலம், கரூர், சேலம், நாமக்கல் என பல மாவட்டங்களில் அவர் மக்களை நேரில் சந்திக்க இருக்கிறார். கொங்கு தமிழ் பேசும் கோவையில் இருந்து விஜய், மக்கள் சந்திப்பு பயணத்தை துவங்குவது, விஜய் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.





