நடிகர் பிரசாந்த், கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர். பல வெற்றிப் படங்களில் நடித்தவர். இளம் கதாநாயகர்களில் மிக முக்கியமான இடத்தில் இருந்தவர் பிரசாந்த். அவர் முதலில் அறிமுகமான படம் வைகாசி பொறந்தாச்சு, மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
தொடர்ந்து வண்ண வண்ண பூக்கள், ராசா மகன், ஆணழகன், திருடா திருடா, ஜீன்ஸ், பார்த்தேன் ரசித்தேன், கண்ணெதிரே தோன்றினாள், வின்னர், செம்பருத்தி, பூமகள் ஊர்வலம், விரும்புகிறேன், செந்தமிழ் செல்வன் என பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர்.
ஆனால் திருமண வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட பலத்த ஏமாற்றம் காரணமாக, சினிமா வாழ்வில் மிகப்பெரிய சரிவை சந்தார். கிரஹலட்சுமி என்ற பெண்ணை அவர் திருமணம் செய்த நிலையில், திருமணத்துக்கு பிறகுதான் அந்த கிரஹலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரமே பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், கோர்ட்டில் மனுதாக்கல், விவாகரத்து என்ற அந்த பிரச்னைகளால் மிகவும் மனம் பாதிக்கப்பட்ட பிரசாந்த், சினிமாவில் நடிப்பதில் தீவிரம் காட்டவில்லை. அதே நேரத்தில் அவர் நடித்த படங்களும் சரியாக போகாததால், நடிப்பதை விட்டு விலகி தனது சொந்த பிஸினஸ்களில் ஆர்வம் காட்டினார் பிரசாந்த்.
இந்த சூழலில், நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தில் விஜய்க்கு நண்பராக நடிக்க இயக்குனர் வெங்கட்பிரபு அழைத்தார். 51வயதிலும் அதே ஹீரோ கெத்துடன் இந்த படத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். விசில் போடு பாடலில் பிரசாந்தின் துள்ளலான, சுறுசுறுப்பான நடனத்தை பார்த்து, ரசிகர்கள் அசந்து போய்விட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் வருகிற ஜூலை 24ம் தேதி, பிரசாந்த் நடிப்பில் உருவான அந்தகன் என்ற படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாக இருக்கிறது. இந்த பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு பாடலை வெளியிட இருப்பவர் நடிகர் விஜய்தான். காதலுக்கு மரியாதை தருபவராக மட்டும் இல்லாமல், நட்புக்கும் மரியாதை தருபவராக, தன்னுடன் தி கோட் படத்தில் நடித்த பிரசாந்த் மீது அதிக நட்பும், மரியாதையும் கொண்டுள்ள விஜய், இந்த விழாவில் பங்கேற்று அந்தகன் படத்தின் முதல் பாடலை வெளியிடுகிறார்.





