தெலுங்கு சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். தெலுங்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் இவர் ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆர்யா 2 திரைப்படத்தில் வெளியான ரிங்க ரிங்கா பாடல் இந்தியா முழுக்க ஹிட் அடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் கவனத்தை ஈர்த்தார்.
தமிழ் சினிமாவில் விஜய் அஜித் என முன்னணி ஹீரோக்களுக்கும் அவர் இசையமைத்திருக்கிறார். அந்த சமயத்தில் பிரம்மாண்டமாக உருவான கந்தசாமி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்திருந்தார். அதன் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆகின. இதேபோல் விஜய் நடித்த சச்சின் திரைப்படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தான் இசையமைப்பாளர்.
அதில் வாடி வாடி பாடலுக்கு விஜய் பாடியிருப்பார். சச்சினை தொடர்ந்து வில்லு திரைப்படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படி தெலுங்கு சினிமாவில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்த அவருக்கு அடுத்த திருப்புமுனையாக அமைந்தது, புஷ்பா திரைப்படம். இந்தியா முழுக்க ஹிட் அடித்த இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் கலக்கலாக இசையமைத்து இருந்தார்.
புஷ்பா திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை தேவி ஸ்ரீ பிரசாத் பெற்றார். இந்த நிலையில் கடந்த ஆண்டு குட் பேட் அக்லி திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகும் போது அதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைப்பதாக இருந்தது. ஏற்கனவே அஜித் திரைப்படமான வீரத்திற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார்.
அதன் தீம் மியூசிக் பட்டையை கிளப்பிய நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி இணைவதாக பேசிக் கொண்டார்கள். ஆனால் திடீரென அவர் படத்தில் இருந்து விலக, அவருக்கு பதில் ஜிவி பிரகாஷ் இணைந்தார். இப்படியான சூழலில் பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்களை தேவி ஸ்ரீ பிரசாத் பகிர்ந்துள்ளார். அதில் ரீமிக்ஸ் பாடல்களுக்கு தான் எப்போதுமே இசையமைப்பதில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
எனது வேலை இசையை உருவாக்குவது தானே தவிர, அடுத்த பாடலுக்கான இசையை மறு உருவாக்கம் செய்வது இல்லை என்று தெரிவித்துள்ளார். அதற்காக ரீமிக்ஸ் பாடலை நான் வெறுப்பதில்லை என்றும் அதனையும் கேட்பேன் எனவும் அவர் கூறியிருக்கிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தில் ரீமிக்ஸ் பாடல்கள் அதிகம் இருந்த நிலையில் ஒருவேளை இதற்காகத்தான் தேவி ஸ்ரீ பிரகாஷ் விலகி விட்டாரோ என இந்த பேட்டியை பார்த்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





