தமிழ் சினிமாவில் மிகவும் யதார்த்தமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. சினிமா நடிகருக்கான எந்த பந்தாவும் அவரிடம் இருக்காது. மிகவும் இயல்பாக மனிதர்களிடம் பழகுபவர். ரசிகர்களை கட்டிப்பிடித்து முத்தம் தரும் அன்புமிக்க ஒரு நடிகர். விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் இருக்கிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அவரது 50வது படம் மகாராஜா, மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்த படம் ரூ. 100 கோடியை கடந்த இந்த ஆண்டில் சிறந்த வெற்றி படமாக
ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தை இந்தியில் ரீ மேக் செய்து அமீர்கான் நடிக்க இருக்கிறார்.
மகாராஜா படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்க இருக்கிறது. இப்போது விடுதலை 2 படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். முதலில் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை 2 படமும், அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படமும் வெளியாக உள்ளது.
வழக்கமாக சினிமாவில் ஹீரோ ஏற்று நடிக்கும் ஆட்டோ டிரைவர், மாடுபிடி வீரர், படகோட்டி, கார் ரேஸ் வீரர், பைக் ரேஸ் வீரர் போன்ற கதாபாத்திரம் என்றால் அதுபோன்ற காட்சிகளில் வேறு நடிகர்களை நடிக்க வைத்து, ஹீரோக்களை போல காட்டி விடுவர். அந்த கேரக்டருக்காக அதிகளவில் மெனக்கெடுவது பலருக்கும் பிடிக்காது. இயக்குனர்களும் அதில் தீவிர கவனம் செலுத்த மாட்டார்கள்.
ஆனால் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் நடிக்கிறார். இதற்காக கடந்த 15 நாட்களாக தனது அலுவலக வளாகத்தில் பெரிய அடுப்பு, தோசைக்கல் வைத்து மாவு பிசைந்து பரோட்டா தயாரித்து வருகிறார். சுடச்சுட பரோட்டா தயார் செய்து, தன் அலுவலகத்தில் உள்ளவர்களை சாப்பிடவும் வைக்கிறார்.
அதனால் விஜய் சேதுபதி அலுவலகம் பக்கம் செல்பவர்களுக்கு விஜய் சேதுபதி கையால் தயார் செய்த பரோட்டா, சுடச்சுட கிடைக்கிறது. அதுமட்டுமின்றி பரேட்டா மாஸ்டர் ஒருவர் வந்து பரோட்டா செய்வது எப்படி என்று பயிற்சி தருகிறார். அவரது மேற்பார்வையில் விஜய் சேதுபதி தயாரிக்கும் பரோட்டகளை பலரும் ரசித்து ருசித்து சாப்பிடுகின்றனர். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் இனி விஜய் சேதுபதி தயாரிக்கும் பரோட்டா விற்பனை சூடுபிடித்து விடும் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





