நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இதுவரை 50 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இப்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் பரோட்டா மாஸ்டராக நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் வெண்ணிலா கபடிக்குழு, புதுப்பேட்டை போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
தர்மதுரை, கருப்பன், காத்துவாக்குல ரெண்டு காதல், நானும் ரவுடிதான் என நாயகனாக நடித்துக்கொண்டிருந்த அவர் பிறகு மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார். பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தார். இந்தியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்திலும் நடித்தார்.
துணை கதாபாத்திரம், ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திரம் என எந்த மாதிரியான கேரக்டர் தந்தாலும் அதில் தனது அழுத்தமான நடிப்பை தந்து விடுவார் விஜய் சேதுபதி என்பதில் ரசிகர்களுக்கு சந்தேகமே இல்லை. அதிலும் மகாராஜா படத்தில் ஒரு பாசமான தந்தையாக அவரது நடிப்பும், ஆவேசமும் வேற லெவலில் ரசிகர்களை மிரட்டியிருந்தது.
பெரும்பாலான ஹீரோக்கள், தங்களது ஹீரோ பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதில் குறியாக இருப்பார்கள். தப்பித் தவறி கூட அந்த இமேஜை விட்டுத் தரவே மாட்டார்கள். மார்க்கெட் இல்லாமல், படங்களில் நடிக்க வாய்ப்பே இல்லாத சூழலில் கூட நடித்தால் ஹீரோ தான் என பிடிவாதமாக இருப்பார்கள். நடிகர்கள் மைக் மோகன், ராமராஜன் போன்றவர்கள் அப்படி இருந்தவர்கள்தான்.
ஆனால் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது குறித்து சமீபத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, நான் படத்தில் நாயகனாக இருந்தாலும் தனிப்பட்ட மனிதனாக எனக்குள் கோபம், ஆவேசம், வன்மம், ஆத்திரம் இருக்கிறது. அதை நாயகனாக நடிக்கும்போது வெளிப்படுத்த முடியாது. ஆனால் வில்லனாக நடிக்கும்போது மனதில் புதைந்துள்ள ஆத்திரம், கோபம், ஆவேசம், வன்மத்தை என்னால் வெளிப்படுத்த முடிகிறது. அதனால் வில்லன் கேரக்டரில் எனக்கு மனரீதியான ஒரு ரிலாக்ஸ் கிடைக்கிறது. அதனால்தான் வில்லன் கேரக்டரில் நடிக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





