நடிகர் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் ரிலீஸ் ஆகாமல் பல மாதங்களாக முடங்கி கிடக்கிறது. அந்த படம் இன்னும் டிஜிட்டல் உரிமம் விற்பனை ஆகாமல் உள்ளதாக கூறப்படுகிறது. மிஷ்கின் இயக்கிய படம் என்பதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ளார்.
இதற்கிடையே தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தை தனது சொந்த நிறுவனம் சார்பில் இயக்குனர் அட்லி தயாரிக்கிறார். மேலும் தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையே இன்னும் சில மாதங்களில் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியும் துவங்க உள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக விஜய் சேதுபதிதான் பங்கேற்க உள்ளார். கமல்ஹாசன் இனி மீண்டும் அங்கு வர வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.
ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு படத்தின் இயக்குனர் பூரி ஜெகநாதன் தெலுங்கில் மிகவும் முக்கியமான ஒரு பிரபல இயக்குனர். ஆனால் அவர் இயக்கிய சில படங்கள் சமீபமாக சரியாக போகாத நிலையில் இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் டீசருக்கு நடிகர் விஜய் சேதுபதி டப்பிங் பேசி தந்திருக்கிறார். ஆனால் படத்துக்கு அவர் இதுவரை டப்பிங் பேசவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பேசப்பட்ட சம்பளம் இன்னும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழங்காத நிலையில் அவர் படத்துக்கு டப்பிங் பேசவில்லை என்று கூறப்படுகிறது.
பொதுவாக படத்தில் நடிக்க கமிட் ஆகும் ஹீரோ நடிகர்கள் தங்களது சம்பளத்தின் பாக்கியை கடைசியாக டப்பிங் பேசும் வரை தயாரிப்பாளருக்கு வாய்ப்பு தருவது வழக்கம். அப்போதும் அவர் சம்பள பாக்கி தர தாமதிக்கும் பட்சத்தில் டப்பிங் பேச வராமல் தவிர்ப்பார்கள். அந்த அடிப்படையில் இப்போது விஜய் சேதுபதி தனது படத்துக்கு டப்பிங் பேச மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.





