நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த ஒரு கலைஞனாக ரசிகர்களால் பார்க்கப்படுபவர். நல்ல நடிகராக பல படங்களில் தனது ஆற்றலை வெளிப்படுத்தியவர். தமிழ், தெலுங்கு, இந்தி என அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வருகின்றன. அதிலும் அவரது 50வது படம் மகாராஜா தந்த வெற்றி, அவரை உலகம் முழுவதும் பேச வைத்திருக்கிறது.
சினிமாவையும் கடந்து வாழ்வியல் சார்ந்த பல்வேறு கருத்துகளை வெளிப்படைாக கூறுபவர் விஜய் சேதுபதி. எந்த சினிமா பின்புலமும் இல்லாமல், அவராக அடிமட்டத்தில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து வெற்றி பெற்றவர் என்பதால், அவரது வாழ்வியல் அனுபவங்களில் பல்வேறு விஷயங்களை அனுபவ உணர்வாக அவர் வெளிப்படுத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவில் காமெடி கிங் என அழைக்கப்படுபவர் கவுண்டமணி. கடந்த 1980களில் கவுண்டமணி காமெடியை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. கவுண்டமணி செந்தில் போஸ்டரில் இருந்தாலே, தியேட்டர்களுக்கு படம் பார்க்கச் செல்லும் ரசிகர் கூட்டம் அப்போது இருந்தது. கவுண்டமணி பேசுவதை கேட்டு வயிறு குலுங்க சிரித்த ரசிகர்கள் ஏராளம்.
கவுண்டமணி செந்தில், தமிழ் சினிமாவில் ஒரு தனி ராஜ்யமே நடத்தினர் என்றால் அது மிகையல்ல. இப்போதும் கவுண்டமணி காமெடியை செல்போனில், டிவியில் பலரும் விரும்பி பார்க்கின்றனர். ஒரு கட்டத்தில் சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் போன்றவர்களுடன் படம் முழுவதும் மற்றொரு ஹீரோ போல வலம் வந்தவர்தான் கவுண்டமணி. இப்போது முதுமை காரணமாக அவரால் நடிக்க முடிவதில்லை,
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் கவுண்டமணி குறித்து பேசினார். அவர் கூறுகையில், கவுண்டமணியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது காமெடியை பார்த்துவிட்டு, மற்றவர்களின் காமெடியை பார்த்தால் எனக்கு சிரிப்பே வராது. குறிப்பாக அவர் நடிக்கும் எல்லா படத்திலும் ஒரு பாடல் கண்டிப்பாக பாடுவார். அதுவே சிரிப்பு வந்துவிடும்.
கவுண்டமணியுடன் நடிக்கும் போது சிரிக்காமல் நடிக்க முடியாது. ஆனால் எப்படி அப்போது நடித்தார்கள் என்றே தெரியவில்லை. ஏனெனில் இப்போது போல அப்போது டிஜிட்டல் இல்லை. பிலிம்தான். சிரிக்காமல் அவருடன் நடித்த எல்லோருமே சிறந்த நடிகர்கள்தான். நானாக இருந்தால் கண்டிப்பாக சிரித்து விடுவேன். ஷாட்டே ஓகே ஆகாது. கவுண்டமணி ஒரு ஜீனியஸ் என்று பாராட்டி பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி.





