இந்திய சினிமாவில் மலையாள சினிமா படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பும் கவனமும் இருந்து வருகிறது. ஏனென்றால் யதார்த்த கதைகளை படமாக்கும் இயக்குனர்களும், அந்த யதார்த்த கேரக்டர்களில் நடிக்கும் சிறந்த நடிகர், நடிகைகளும் மலையாளத்தில் மிக மிக அதிகம்.
நடப்பு ஆண்டில் மலையாளத்தில் இருந்து பிரேமலு ஆடுஜீவிதம் மஞ்சும்மெல் பாய்ஸ் பிரமயுகம் ஆவேசம் போன்ற பல வெற்றிப் படங்கள் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பையும், வசூலையும் பெற்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த 5 படங்களும் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
தமிழ் சினிமாவை போல அங்கு பல நூறு கோடி ரூபாய் செலவில் பெரிய பட்ஜெட் படங்களோ, அதே போல் நடிகர்கள் சம்பளம் 100 கோடி, 200 கோடி ரூபாய் என்பதெல்லாம் கிடையாது. படப்பிடிப்பு நாட்களும் 25 முதல் 30 நாட்கள்தான் நடக்கும். அதனால் மலையாள படங்களை பொருத்த வரை நடிப்பும், கதையும்தான் அங்கு வெற்றியை சொல்லும். ரசிகர்களின் வரவேற்பை அள்ளும்.
இந்நிலையில் கேரளா சினிமாத்துறை 2024ம் ஆண்டில் மட்டும் 650 கோடி முதல் 700 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்துள்ளதாக கேரளா திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது.
2024ம் ஆண்டு மலையாள சினிமாவில் 5 ரீ ரிலீஸ் படங்கள் உட்பட மொத்தம் 204 படங்கள் வெளியாகின. இதற்கு சுமார் 1000 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டது. இதில் 26 திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று எங்களுக்கு 350 கோடி ரூபாய் மட்டுமே லாபமாக கிடைத்தது. அதே நேரத்தில் 650 கோடி முதல் 700 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் நடிகர்கள், தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அடிக்கடி கோரிக்கை விடுத்த போதிலும் அவர்கள் அதை விரும்பவில்லை. இது தொடர்ந்தால் மலையாள திரைப்படத்துறை பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் 2024ம் ஆண்டில் வெளியான படங்களில் எத்தனை கோடி நஷ்டம் என்பதை தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் தெரிவிக்குமா, என்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் இப்போது கோரிக்கை எழுந்துள்ளது.





