நடிகர் விஜய் சேதுபதி தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். கடந்தாண்டில் வெளியான மகாராஜா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் பரோட்டா மாஸ்டராக நடித்துள்ளார். இந்த படத்தில் நித்யாமேனன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்துள்ளது.
அதற்கு முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ட்ரெயின் என்ற படமும் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. வருகிற மார்ச் மாதத்தில் இந்த படமும் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் வில்லனாக நாசர் நடித்திருக்கிறார்.
கோவையில் இருந்து சென்னை வரும் ரயிலில் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை வைத்து, ட்ரெயின் படத்தின் கதையை படமாக்கி இருக்கிறார் மிஷ்கின். அவரது படங்களில் அஞ்சாதே துப்பறிவாளன் சைக்கோ படங்களின் வரிசையில் ட்ரெயின் படமும் பெரிய அளவில் ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கி, நேற்று வரை நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். வாரந்தோறும் சனி ஞாயிறு தினங்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, நடிகராக மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று நடந்த டைட்டில் வின்னர் அறிவிப்புக்கு பின் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்த வரை எனக்கு அழகான பாதை அமைத்து கொடுத்தவர் நடிகர் கமல்ஹாசன். அவர் அமைத்து தந்த பாதையில் நான் நான் நடந்து வந்தேன். பாதுகாப்பாக இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்றேன்.
10 அடுக்கு மாடி, 9 அடுக்கு மாடியை கட்டியது போல பிக்பாஸ் நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக நடத்தி 7 அடுக்கு மாடி கட்டிடத்தை கட்டியவர் கமல் சார்தான். அவர் போட்ட உறுதியான அஸ்திவாரத்தில்தான் நான் 8வது மாடியில் இருக்கிறேன். 7 ஆண்டுகளாக மக்களை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வசப்படுத்தி வைத்திருந்த கமல் சாருக்கு மனதார நன்றி சொல்கிறேன், என்று விஜய் சேதுபதி பேசினார்.





