தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். துவக்கத்தில் புரட்சிக் கலைஞர் என்றும் பிறகு, கேப்டன் என்றும் அழைக்கப்பட்ட விஜயகாந்த், 2005ம் ஆண்டில் தேமுதிக என்ற அரசியல் கட்சியை துவக்கி, தமிழக அரசியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். 2015ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில், அதிக தொகுதிகளை வென்று எதிர்கட்சி தலைவராகவும் வெற்றி பெற்றார்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக இருந்த விஜயகாந்த், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக பதவி வகித்தார். அப்போது துபாய், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நட்சத்திர இரவு கலைநிகழ்ச்சிகளை நடத்தினார். ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகளை பங்கேற்க வைத்து, அதன்மூலம் திரட்டிய நிதியை கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடன்களை அடைத்தார்.
அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் வந்த பிரச்னைகளை எல்லாம் சங்கத் தலைவராகவும், முன்னணி நடிகராகவும் இருந்து தீர்த்து வைத்தார். கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு தமிழக அரசியல் ஆளுமைகளை எதிர்த்து, களத்தில் நின்று துணிச்சலாக அரசியல் செய்தவர் விஜயகாந்த். திமுக, அதிமுக கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் ஒரு கட்டத்தில் மாறினார்.
இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கேப்டன், ஏழு ஆண்டுகளாக நோயுடன் போராடிய நிலையில் அவர் கடந்த டிசம்பர் 28ம் தேதி மறைந்தார். அதன்பிறகு விஜயகாந்தை கௌரவிக்கும் விதமாக நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட்பிரபு ஆகியோர் தங்களது தி கோட் படத்தில் விஜயகாந்த் இடம்பெறும் ஒரு நிமிட காட்சியை வைத்துள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கேப்டன் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் எங்கள் அனுமதி பெறாமல் யாரும் பயன்படுத்த கூடாது. எங்களது அனுமதியின்றி கேப்டன் தங்களது படத்தில் நடிப்பதாக ஆடியோ லாஞ்சில் அறிவிப்புகள் செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எ்னறும் கூறியிருந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தி கோட் படத்துக்கு பிரேமலதா அனுமதி தந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் புதிய நிபந்தனைகளை பிரேமலதா விதிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது விஜயகாந்தை தங்களது படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் காட்ட வேண்டும் என்று பிரேமலதாவிடம் அனுமதி கேட்டு டைரக்டரோ, தயாரிப்பாளரோ வந்தால் பெரிய தொகை ஒன்றை கூறுவது, இல்லை என்றால் ஷண்முகபாண்டியனுக்கு அந்த படத்தில் நடிக்க சம்மதிப்பது என்ற இரண்டில் ஒன்றை ஓகே செய்யுமாறு பிரேமலதா கண்டிஷன் போடுகிறார். இதனால் அவர்கள் தெறித்து ஓடி விடுகின்றனர்.





