சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமை நிர்வாகிகள் செங்கோட்டையன் புஸ்லி ஆனந்த் ஆதவ் அர்ஜூனா நிர்மல்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது, அழுத்தம் எனக்கு கொடுக்கப்படுகிறதா என்றால் ஆமாம் கொடுக்கப்படுகிறது. ஆனால் எனக்கு இல்லை மக்களுக்கு. அழுத்தத்துக்கு பயப்படுகிற ஆள் நான் இல்லை. அவர்கள் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
மக்களை 30 ஆண்டுகளாக அவர்கள் குறைத்து மதிப்பிட்டு வருகிறார்கள். ஆனால் மக்கள் நம்மை சரியாக மதிப்பிட்டு தான் வருகிறார்கள். அரசியலுக்கு வந்த பிறகும் சரி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகும் சரி இதற்கு முன்னாடி இருந்தவர்கள் போலவும், தற்போது இருப்பவர்கள் போலவும் ஊழல் செய்ய மாட்டோம். அதை நான் தொட மாட்டேன்.
ஒரு துளி ஊழல் கறை கூட படியவே கூடாது. படியவும் விட மாட்டோம். எதற்கும் ஆசைப்படாத ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால் அவன் முன்னாடி தவறு நடந்தால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டான். தீயசக்தி ஊழல் சக்தி தமிழகத்தில் ஆட்சியில் அமரக் கூடாது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடங்கிப் போவதற்கும் அடிமையாக இருப்பதற்கும் அரசியலுக்கு நான் வரவில்லை.
மக்களை பாதுகாப்பதற்கு மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன். மக்களுக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால் போதாது. என்னுடன் இருக்கும் தோழர்கள் மீதும் அந்த நம்பிக்கை மக்களுக்கு வரவேண்டும் என்று நடிகர் விஜய் இந்த கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சின்னமான விசில் சின்னத்தை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.
மேலும் இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய் தவெக படை தனிப்படையாக வெல்லும் என்றும் சூசகமாக பேசியிருக்கிறார். இதன்மூலம் எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் வருகிற சட்டசபை தேர்தலில் தவெக கட்சி தனித்தே இந்த தேர்தலை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது. தவெக கட்சியை மட்டுமே தலைமையாக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பதில் நடிகர் விஜய் உறுதியாக இருப்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.





