தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2வது மாநில அரசியல் மாநாடு மதுரையில் உள்ள பாரப்பத்தியில் நேற்று மாலை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருந்த மாநாட்டு திடலில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் ஆவேசமாக பேசினார். குறிப்பாக திமுக பாஜக குறித்து அவர் விமர்சித்து பேசியது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், நடிகர் விஜயகாந்த் குறித்தும் பேசியிருந்தார். அப்போது விஜய், நான் இந்த மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ஒருவரை பற்றிதான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அவர் யார் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் எனக்கு ரொம்ப பிடித்தவர் எம்ஜிஆர்தான்.
ஆனால் அவரோடு பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர் மாதிரியே குணம் கொண்ட என் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு பழகுவதற்கு நிறையவே வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவர்தானே, அவரை மறக்க முடியுமா என்று விஜய் அந்த மாநாட்டில் பேசினார்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்புதான் தேமுதி பொதுச் செயலாளர் பிரேமலதா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். கேப்டன் விஜயகாந்த் புகைப்படத்தை மற்ற அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. தேர்தல் நேரத்தில் எங்களுடன் கூட்டணி வைக்கும் அரசியல் கட்சிகள் மட்டுமே அந்த நேரத்தில் கேப்டன் புகைப்படங்களை பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில் மதுரை மாநாட்டில் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, தம்பி என்கிற எண்ணத்தில் விஜய் பேசியிருக்கிறார். அவர் எப்போதுமே எங்கள் வீட்டு பையன்தான். பல்வேறு படங்களில் கேப்டனின் சிறுவயது கேரக்டர்களில் விஜய் தான் நடித்திருக்கிறார். எஸ் ஏ சந்திரசேகருக்கும் கேப்டனுக்குமான உறவு என்பது கேப்டனை வைத்து 17 படங்களை அவர் இயக்கியிருக்கிறார். இன்றைக்கு அரசியலுக்கு வந்ததால் அண்ணன் தம்பி என்று இல்லை. கேப்டன் சினிமாத்துறையில் காலடி வைத்ததிலிருந்து இன்றைக்கு வரைக்கும் அந்த நட்பும் உறவும் அப்படியே தொடர்கிறது.
விஜயின் படத்துக்கு கூட கேப்டன் ஏஐ பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்தோம். ஒரு வாரத்துக்கு முன்பு அனுமதியில்லாமல் கேப்டனின் புகைப்படங்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று கூறியிருந்தேன். அதற்கு காரணம் கேப்டன், எம்ஜிஆரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். அந்த மாதிரி விஜயும் சொல்லட்டும். இப்போது அண்ணன் என்று அவர் சொல்லியிருக்கிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





