தமிழ் சினிமாவில் தனது பெயரை போலவே தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் அடுத்து ஆடுகளம் விசாரணை அசுரன் வடசென்னை விடுதலை விடுதலை 2 ஆகிய படங்களை இயக்கி வெற்றிப் பட இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.
அடுத்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் உருவாக உள்ளது. நடிகர் சூர்யா இயக்குனர் அமீர் முக்கிய கேரக்டர்களில் இணைந்து நடிக்கும் இந்த படம் மதுரை கதைக்களத்தில் ஜல்லிக்கட்டுவை மையப்படுத்தி உருவாக்கப்பட உள்ளது.
இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் நல்ல படங்களை தயாரிப்பதில் வெற்றிமாறன் ஆர்வமாக இருந்து வருகிறார். சமீபத்தில் வெற்றிமாறன் எழுதிய கதையை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஏனெனில் கதை திரைக்கதையில் வெற்றிமாறன் தொடர்ந்து சக்சஸ்புல் இயக்குனராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது, நான் 7ம் வகுப்பு படிக்கும் போது நான் ஒருமுறை எக்ஸாமில் காப்பியடிச்சு எழுதி மாட்டிக்கிட்டேன். ஆனால் வீட்டில் போய் நான் சமாளிச்சுட்டேன். அக்கா அம்மாவிடம் ஏதோ சொல்லி நான் நம்ப வெச்சுட்டேன். நான் சொன்னா அவங்க நம்புவாங்க.
நான் பார்த்தே எழுதலே, பக்கத்துல இருந்தவன் எழுதினதுக்கு என்னை பிடிச்சுட்டாங்க என்று சொல்லி அவங்களை நம்ப வெச்சுட்டேன். எங்கப்பா நைட்தான் வந்தார். வந்தவுடனே நான் காப்பியடிச்சு எழுதியிருப்பேன் என்பதை கண்டுபிடிச்சுட்டார். நைட் 2 மணிக்கு என்னை எழுப்பறாங்க. நான் அப்படியே தூங்கற மாதிரி நடிச்சுட்டு அப்புறம் முடியாம எந்திரிச்சுட்டேன்.
அப்போ அவர் சொன்ன விஷயம், படிக்கறது பாஸ் ஆகறதுக்கு மட்டும் இல்லே, நாம கத்துக்கறதுக்கு நாம தெரிஞ்சுக்கறதுதான். உனக்கு ஒண்ணு தெரியாமல் நீ பாஸ் ஆக வேண்டிய அவசியம் இல்லே. பாஸ் ஆகறது நம்ம நோக்கம் கிடையாது. கத்துக்கறதுதான் நம்ம நோக்கம் என்று சொன்னார். அது அப்படியே என் புத்தியில் தங்கி விட்டது. அதனால் எதையும் கத்துக்காமல் செய்றது இல்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.





