நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவருக்கு சில படங்கள் பெரிய திருப்புமுனையாக இருந்து வெற்றிப் பாதைக்கு வழிவகுத்தன. அந்த வகையில் பூவே உனக்காக காதலுக்கு மரியாதை குஷி சச்சின் திருமலை கில்லி போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இதில் குஷி படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப் படமாகும்.
இப்போது தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கனாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகர் எஸ்ஜே சூர்யா இயக்கிய படம்தான் குஷி. முதலில் அஜீத்குமார் சிம்ரன் நடித்த வாலி படத்தை இயக்கிய எஸ்ஜே சூர்யாவுக்கு வாலி படம் மாஸ் ஹிட் படமாக அமைந்தது. அடுத்து அவர் விஜய் ஜோதிகா நடிப்பில் இயக்கிய குஷி படமும் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது.
குஷி படத்தை பொருத்த வரை கல்லூரியில் படிக்கும் மாணவர் விஜயும், மாணவி ஜோதிகாவும் நட்பாக பழகுகின்றனர். நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மாறுகிறது. ஆனால் ஒருவர் மீது ஒருவருக்கு உள்ள காதலை சொல்லாமல் மறைக்கின்றனர். ஒரு கட்டத்தில் அவர்களது ஈகோ அவர்களது காதலை சொல்ல விடாமல் பிரிவை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையே கதையில் வரும் சம்பவங்கள் அவர்களை கடைசியில் இணைத்துவிட்டதா, அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் கதை. இதில் சம்பவங்களும் அது சம்பந்தமான காட்சிகளும்தான் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றதே தவிர படத்தில் அழுத்தமான கதையாக பார்த்தால் ஒன்றுமே சொல்ல முடியாது. ஸ்கிரிப்ட்தான் படத்தை சுறுசுறுப்பாக கொண்டு சென்றது என்றது உண்மை.
குஷி படம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் கூறியதாவது, ஒரு நடிகர் என்கிட்ட இந்த கேள்வியை கேட்டார். இதை அவர் கூட இப்போ மறந்திருப்பார் என்று நினைக்கிறேன். என்கிட்ட என்ன கேட்டார்னா, எப்படி விஜய் குஷி படத்தை நீங்க சூஸ் பண்ணினீங்க?. அந்த படத்துல கதைன்னு என்ன இருக்குது, எப்படி நீங்க அந்த படத்துல நடிச்சீங்க என்று ஆச்சரியமாக கேட்டார்.
நான் அவர்கிட்ட சொன்னேன், கரெக்டுதான் சார். நீங்க சொல்றது கரெக்டுதான். ஆனா எஸ்ஜே சூர்யா எஸ்ஜே சூர்யான்னு ஒருத்தர் இருக்கிறார் சார். அவர் கதை சொல்லி நீங்க கேட்கணும் சார். கிங்கு சார். நேரேஷன்ல அவர் கிங்கு சார். அவர் கதையை சொன்ன விதம், அந்த சீன்களை பிடிச்ச விதம், அதுல வந்து நான் ஒரு மாதிரி மெர்சமைரஸ் ஆகிட்டேன் சார். அதை வெச்சுதான் நான் அந்த படத்தை பண்ணினேன்னு நான் சொன்னேன் என்று இயக்குனர் எஸ்ஜே சூர்யா குறித்து வெளிப்படையாக நடிகர் விஜய் பேசியிருக்கிறார்.





