நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக மட்டுமில்லாமல் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் இந்த படத்துடன் சினிமாவை விட்டு விலகப் போவதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் விஜய் இப்போது நடித்துள்ள ஜனநாயகன் படம் அவரது 69வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது மாஸ் ஹிட் படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று முன்தினம் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜனநாயகன் படக்குழு தரப்பிலிருந்து ஜனநாயகன் படத்தில் இடம்பெற்ற காட்சிகளுடன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அது 24 மணி நேரத்தில் 32.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன் என்பதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த படம் அரசியல் களத்தில் அவரது செயல்பாட்டுக்கான முன்னோட்டமாக பல விஷயங்களை விஜய் இந்த படத்தில் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார். அந்த பதிவில் நடிகர் விஜய் கூறியிருப்பதாவது, எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அதோடு உலகம் எங்கிலும் இருந்து வாழ்த்து செய்தி அனுப்பிய திரைப்படத்துறை ஊடகத்துறை நண்பர்கள் மற்றும் என் நெஞ்சில் வாழும் தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மக்களுக்கான சேவை செய்யும் என்னுடைய பயணத்தில் நீங்கள் அளிக்கும் ஆதரவு என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய இந்த பயணத்தில் நாம் அனைவரும் கைகோர்த்து செல்வோம் என்று அந்த பதிவில் நடிகர் விஜய் தெரிவித்திருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





