தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜீத்குமாரின் தாயார் மோகினி மணி உடல் நலக்குறைவால் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அருமை நண்பர் அஜீத்குமாரின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜீத்குமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஜய் கூறியிருக்கிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், அன்பு சகோதரர் அஜீத்குமாரின் தாயார் மறைவு செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிர் கொடுத்து தான் உயரங்கள் தொட்டதை பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜீத் குமாரை தேற்றுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்த துயரில் அவர் மீளத் துணை நிற்க விழைகிறேன் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சகோதரர் அஜீத்குமாரின் தாயார் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அன்புத்தாயை இழந்து தவிக்கும் அஜீத்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில், திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர் கார் பந்தய வீரர் சகோதரர் அஜீத்குமாரின் தாயார் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயருற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் அஜீத்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், நடிகரும் கார் பந்த வீரருமான அஜீத்குமாரின் தாயார் வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் அஜீத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன் ஓம் சாந்தி என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். பாஜக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அஜீத்குமாரின் தாயார் மறைவிற்கு தங்களது இரங்களை தெரிவித்து பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.





