ஒரு படத்தின் வெற்றிக்கு பல விஷயங்கள் பக்கபலமாக இருந்தாலும், படத்தில் இசை, பாடல்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. இசைக்காக, பாடலுக்காக ஓடிய படங்கள் தமிழ் சினிமாவில் நிறைய இருக்கின்றன. ரஜினி நடித்த ஜெயிலர் படத்தை இசையால் தூக்கி நிறுத்தியது அனிருத் தான். அதே போல் சமீபத்தில் வெளியான ராயன் படத்திலும், இசையால் ரசிகர்களை வசப்படுத்தியது ஏஆர் ரகுமான்தான்.
ஏனெனில் படத்தில் இடம்பெறும் பாடல்கள், பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலத்தை தருகிறது. அப்படி ஏமாற்றம் தந்தால், படத்தை ரசிகர்கள் விரும்புவதில்லை. அதற்கு முக்கிய உதாரணமாக சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தை சொல்லலாம். இந்த படத்தின் பாடல்களும், இசையும் ரசிகர்களே சிறிதும் கவரவில்லை. 28 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்தியன் படத்தில், ஏஆர் ரகுமான் பாடல்களில், இசையில் தனி ராஜ்ஜியமே நடத்தி இருந்தார்.
அதனால் ஒரு படத்துக்கு நடிகர், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே போல் இசையும் பாடல்களும் அதிக முக்கியத்தும் பெறுகின்றன. ஆனால் விஜய் நடித்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவர உள்ள தி கோட் படத்தின் இசையும், பாடல்களும் ரசிகர்களை நொந்து போக செய்திருக்கின்றன.
குறிப்பாக விஜய் படங்கள் என்றாலே, பாடல்களும், இசையும் வேற லெவலில் இருக்கும். விஜய் சிறந்த டான்ஸர். பாடகர். ரசிகர்களை ஏகப்பட்ட உற்சாகப்படுத்தும் பவர் உள்ள நடிகர். அவரது படங்களில் இடம்பெறும் பாடல்கள் எல்லாமே, ரசிகர்களால் ஒருவிதத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் தி கோட் படத்தில் இதுவரை வெளியான 3 பாடல்களுமே ரசிகர்களை பெரிதும் கவரவில்லை.
அதிலும் நேற்று வெளியான நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு பாடல் ரசிகர்களுக்கு பெரிய அதிருப்தியை தந்திருக்கிறது. அதிலும் விஜயின் தோற்றம் ரசிகர்களை மேலும் கவலைப்பட வைத்திருக்கிறது. எதிர்காலத்தில் தமிழக முதல்வர் பதவிக்கு போட்டியிடும் ஒரு பெரிய நடிகரை, அரசியல்வாதியை இப்படியா சிறுபிள்ளைத்தனமாக காட்டுவது என்று ரசிகர்கள், பயங்கர கடுப்பில் இருந்து வருகின்றனர். ரசிகர்களின் எதிர்மறை விமர்சனங்களால் அப்செட்டில் இருக்கிறார் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
ஆனால் தி கோட் படத்தை முழுவதுமாக பார்த்துவிட்ட நடிகர் விஜய், வெங்கட்பிரபுவை பாராட்டி இருக்கிறார். மேலும் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி அர்ச்சனா உள்ளிட்ட குடும்பத்தாரும் படத்தை பார்த்து மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக இருக்கும் என்று அவர்கள் சொன்னதால், தி கோட் படக்குழு ஏகப்பட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.





