தமிழக மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்ற நடிகராக, 1990களில் இருந்தவர் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அன்றைய பாஜக ஆட்சியில் இருந்த பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கூட ரஜினிக்கு ஆதரவு தருவதாக கூறி அழைத்தார். ஜிகே மூப்பனாரும் ஆதரவு தந்தார். ஆனால் கருணாநிதி, ஜெயலலிதாவை எதிர்த்து தமிழகத்தில் அரசியல் பண்ண விரும்பாத ரஜினி, அரசியலுக்கு வர மறுத்துவிட்டார்.
ஆனால் அதற்கு பிறகு விஜயகாந்த் தமிழக அரசியலுக்கு வந்து ஒரு கலக்கு கலக்கினார். திமுகவையே மூன்றாவது இடத்துக்கு தள்ளிவிட்டு, 2ம் இடத்தில் தமிழக சட்டசபையில் ஜெயலலிதா அமைச்சரவையில் எதிர்கட்சி தலைவராக, அமர்ந்தார். ஆனால் காலத்தின் அலங்கோலமாக அவரால் அரசியலில் நீடித்திருக்க முடியாமல் நோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார். அவர் நலமுடன் வாழ்ந்திருந்தால் முதலமைச்சராக கூட வந்திருக்க அதிக வாய்ப்பிருந்தது.
ஆனால் அதற்கு பிறகு யாருமே எதிர்பார்க்காத ஒரு சூழலில், நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை மதுரையில் துவக்கி, மாநாடும் நடத்தினார். இவர் எதற்கு இப்போது அரசியல் கட்சி துவக்குகிறார், என்று ஆச்சரியப்படாத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. ஏனெனில் கமலை அன்று முதல் இன்று வரை நடிகராக ஏற்றுக்கொள்ள மக்களால், அரசியல்வாதியாக அங்கீகரிக்க முடியவில்லை.
இந்த சூழலில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கி இருக்கிறார். வருகிற செப்டம்பர் மாதம் 21ம் தேதி, திருச்சியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறார். 10 லட்சம் பேர் பங்கேற்று அமரும் வகையில் இருக்கை வசதிகளுடன் மாநாட்டு பந்தல் அமைக்கப்படுகிறது. இந்த விழாவில் தனது கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை தவெக கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்க இருக்கிறார்.
நடிகர் விஜய் இப்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மலேசியா அல்லது சிங்கப்பூரில் இசை விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கிய பிறகு, விஜய் பங்கேற்க உள்ள பிரமாண்ட விழாவை சென்னையில் நடத்தாமல் வெளிநாட்டில் நடத்துவது, ரசிகர்களை, தவெக கட்சியினரை மிகப்பெரிய அதிருப்தியடைய செய்துள்ளது. லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த விடாமல் திமுக அரசு தடுத்தது போல, இதையும் தடுத்து விடும் என்பதால் தமிழகத்தில் நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவையே தமிழகத்தில் நடத்த யோசித்தால், திமுகவை எதிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்வது எப்படி என்று நெட்டிசன்கள், விஜயை விளாசித் தள்ளுகின்றனர்.





