வழக்கமாக மேடைகளில் சொற்பொழிவாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் பேசும்போது சில குட்டி கதைகளை சொல்வார்கள். அதே போல் ஆரம்பத்தில் அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர் பேசும் மேடைகளில் டைமிங் ஆன சில குட்டிக் கதைகளை சொல்லி அங்கிருக்கும் பொது மக்களை அசத்தி விடுவார்.
அது பெரும்பாலும் எதிர்கட்சி திமுகவை மறைமுகமாக குத்திக்காட்டும் ஒரு குட்டிக்கதையாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் ரஜினிகாந்த்தும் அவர் பேசும் மேடைகளில் நிச்சயமாக ஏதாவது ஒரு குட்டி கதை சொல்லுவார். அதுவும் ஆன்மீகம் சார்ந்த மிக அற்புதமான ஒரு விஷயமாக தான் இருக்கும்.
ரஜினி சொல்லும் குட்டிக் கதைகளை ரசிக்கவே பெரும்பாலான ரசிகர்கள் அவரது கூட்டத்துக்கு நேரில் வர விரும்புவார்கள். அந்த அளவுக்கு ரஜினி சொல்லும் குட்டிக் கதைகள் மிகவும் பெரிய அளவில் ரசிகர்களை கவரும். ஜெயலலிதா ரஜினிகாந்த் பாணியிலேயே நடிகர் விஜய்யும் ஒரு கட்டத்துக்கு பிறகு அதே போல் மேடைகளில் பேசும்போது குட்டிக்கதைகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
நடிகர் விஜய் சொல்லும் குட்டிக் கதைகளும் கேட்பதற்கு சுவாரசியமாகவும் நல்ல ஆழமான கருத்துக்கள் கொண்டதாகவும் தான் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் வழக்கம் போல ஒரு குட்டி கதை சொன்னார். அப்போது விஜய் கூறியதாவது, குட்டி ஸ்டோரி மாதிரி ஒன்று சொல்கிறேன். ஒரு ஆட்டோக்காரன் ஒரு கர்ப்பிணி பெண்ணை மழையில் அழைத்துக்கொண்டு போகிறார்.
அந்த பெண்ணிடம் குடை இல்லாததால் தன்னிடம் இருக்கும் குடையை அந்த பெண்ணுக்கு கொடுக்கிறார். அந்தப் பெண், இதை உங்களுக்கு எப்படி திருப்பிக் கொடுப்பது என்று கேட்கிறார். உடனே அவர் தேவைப்படும் யாருக்காவது குடையை கொடுத்து விடுங்கள் என்று கூறுகிறார். அதே போல் மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண் அங்கு முதியவர் ஒருவர் குடை இல்லாமல் இருந்ததை பார்த்து அவருக்கு அந்த குடையை கொடுக்கிறார்.
அந்த முதியவர் அதை ஒரு பூக்கார அம்மாவிடம் கொடுக்கிறார். அந்த பூக்கார அம்மா ஒரு பள்ளிச் சிறுமிக்கு குடையை கொடுக்கிறார். அந்த சிறுமியின் அப்பா தான் அந்த ஆட்டோக்காரர். இந்த கதையிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, நாம் மற்றவர்களுக்கு எப்போதும் ஏதாவது ஒரு உதவியை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். பழமொழி ஒன்று உள்ளது. வெள்ளத்தில் சிரமப்படுபவருக்கு படகு கொடுத்து உதவினால் அது நாளை பாலைவனத்தில் நீங்கள் சிரமப்படும்போது ஒட்டகமாக வந்து நிற்கும் என்பதுதான் அது என்று நடிகர் விஜய் கூறினார்.





