நடிகர் விஜய் இப்போது தளபதி 69 என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஏற்கனவே இவர் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். பிரமேலு பட நடிகை மமிதா பைஜூவும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், இந்த படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, முழுநேர அரசியல்வாதியாக மாறி தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிறார். வரும் 2026ம் ஆண்டில் எதிர்கொள்ளும் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழக முதல்வர் நாற்காலியில் அமரும் லட்சியத்தில் அவர் செயல்பட்டு வருகிறார்.
இதுவரை தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் 90 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். இன்னும் சட்டசபை தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் கால அவகாசம் உள்ளதால், அதற்குள் தவெக கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை இணைத்து விடுவோம் என்று கடசி நிர்வாகிகள் உறுதியாகி கூறி வருகின்றனர்.
இந்நிலையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தனது தந்தை விஜயை போல சினிமாவில் நடிகராக விரும்பவில்லை. தனது தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல இயக்குனராகி உள்ளார். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை ஜேசன் சஞ்சய் இயக்க உள்ளார். படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
நடிகர் விஜய், தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் நடித்துதான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துவக்கத்தில் பெரிய வரவேற்பை பெறாத விஜய், செந்தூரப்பாண்டி படத்துக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, கில்லி போன்ற படங்களுக்கு பிறகு முன்னணி நடிகராக மாறினார்.
இப்போது டாப் ஸ்டார் நடிகராக உள்ள விஜய், தளபதி 69 படத்துடன் தன் திரையுலக பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். ஆனால் தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய படத்தில் அறிமுகமான நடிகர் விஜய், தனது கடைசி படத்தை தனது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடித்திருந்தால், தனது அப்பா இயக்கத்தில் நடிக்க வந்து, மகன் இயக்கிய படத்தில் நடித்து சினிமாவை நிறைவு செய்த விஜய் என்ற பெருமை தளபதிக்கு கிடைத்திருக்குமே என்று விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.





