- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை பார்க்க வர்ற யாரும் பசியோடு திரும்பி போக கூடாது, இப்படி நான் நினைக்க என்ன...

என்னை பார்க்க வர்ற யாரும் பசியோடு திரும்பி போக கூடாது, இப்படி நான் நினைக்க என்ன காரணம் தெரியுமா? – வெளிப்படையாக சொன்ன கேப்டன் விஜயகாந்த்!

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகை நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜயகாந்த் கூறியதாவது, நான் நடித்த இனிக்கும் இளமை படம் வெளிவந்ததும் என் பெயர் கொஞ்சம் வெளியே தெரிந்தது. அடுத்து அகல் விளக்கு படத்துக்கு எனக்கு சான்ஸ் வந்தது. இந்தப் படத்துல தான் நிறைய அவமானங்கள். அப்போது ஷோபா ரொம்பவும் பாப்புலர். பிஸி ஆர்ட்டிஸ்ட். அகல் விளக்கு படப்பிடிப்பு அன்னிக்குக் காலையிலேருந்து மத்தியானம் சாப்பாட்டு வேளை வரைக்கும் ஷோபா வரவே இல்லை.

எனக்கு நல்ல பசி. பசி பொறுக்காம கடைசியிலே மதியம் சாப்பிட உட்கார்ந்தேன். உடனே ஷோபா வந்துட்டாங்கனு சொல்லி, சாப்பிடக்கூட விடாம பாதியிலேயே எழுப்பி இழுத்துக்கிட்டுப் போனாங்க. ஒரு நிமிஷம் மனசு கலங்கிட்டேன். இதையெல்லாம் மீறி தட்டுத்தடுமாறி முன்னுக்கு வந்துக்கிட்டிருந்தேங்கறது உண்மை. டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் சட்டம் ஒரு இருட்டறை படத்துக்கு என்னை புக் பண்ணினார்.

- Advertisement -

படம் பெரிய ஹிட் ஆச்சு. பல மொழிகளில் அந்தப் படத்தை எடுத்தாங்க. அதுக்குள்ள ரோகிணி லாட்ஜில் இருந்து பக்கத்துக் கட்டடத்துல ஒரு ரூமுக்கு மாறியிருந்தோம். அதிலதான் நானும் என் நண்பன் இப்ராஹிமும் இருப்போம். நான் ஷூட்டிங் போயிட்டா இப்ராஹிம்தான் என் பேன்ட், ஷர்ட்டெல்லாம் வாஷ் பண்ணுவான். என்னைப் பார்க்க யார் வந்தாலும், அவன் டீ காபி வாங்கிக்கிட்டு வருவான்.

ரூம்ல நானும் அவனும் மட்டும் இருப்போம். சட்டம் ஒரு இருட்டறை ரிலீஸானதும், ரூம்ல ஏகக் கூட்டம். ஆனால், பல மாதங்கள் சினிமாக்காரங்க பின்னால் அலைஞ்சதனால் நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு எங்களால் புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் படம் ஒப்புக்கிட்டோம். அதுக்கப்புறம் சில படங்கள். எல்லாமே ஃபெயிலியர். மறுபடியும் ரூம்ல நானும் இப்ராஹிமும் மட்டும்தான். ஒரு வருஷம் அப்படி சும்மா இருந்தோம்.அதுக்கு அப்புறம்தான் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் சாட்சி படம் வந்தது. ஹிட் ஆச்சு. ஒரு வழியா நின்னேன்.

- Advertisement -

தன்மானத்தையும், சுயகௌரவத்தையும் இழந்து நடிச்சிக்கிட்டே இருக்கணும்கிற அவசியம் எனக்கில்லை. அப்படிச் செய்யவும் மாட்டேன். அதே சமயம் அடுத்தவங்க தன்மானத்தைக் குறைக்கிற மாதிரி நான் நடந்துக்கவும் மாட்டேன். இது நிச்சயம். என்னோட பழகினவங்களுக்கு இது தெரியும். அவமானத்தில் வளர்ந்தவங்களுக்கு மனசுல ஒருவிதமான கோபம் படிஞ்சு போயிடும்.

நாம பட்ட வேதனைகளை அடுத்தவனும் படனும்ன்னு மத்தவங்களை அவமானப்படுத்துவாங்க. ஆனால், கடவுள் புண்ணியத்துல என் மனசுல அந்த மாதிரி எண்ணங்கள் வளரலை. நாம பட்ட கஷ்டங்கள் மத்தவங்க படக்கூடாதுன்னு நினைக்கிறேன். நல்ல நடிகன் என்கிறதைவிட நல்ல மனுஷன்னு பேர் எடுக்கிறதுதான் என் லட்சியம். இன்னிக்கு ஓரளவுக்கு அந்தப் பெயர் வாங்கியிருக்கேன். என் காம்பவுண்டுக்குள்ளே வந்து யாரும் அவமானப்படக்கூடாது. அதேமாதிரி பசியோட யாரும் திரும்பிப் போகக் கூடாது என்று அதில் நடிகர் விஜயகாந்த் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்