வழக்கமான சட்டசபை தேர்தல்களை விட தமிழ்நாட்டில் இந்த முறை அதிக பரபரப்பை கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் குதித்திருப்பது பெரிய அளவில் கவனத்தை பெற்றிருக்கிறது. அதுவும் விஜய்க்கு பெருகி வரும் ஆதரவும் அரசியல் செல்வாக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.
வழக்கமாக திமுக – அதிமுக கூட்டணி கட்சிகள் மட்டுமே நேரடியாக தேர்தல் களத்தில் மோதும் நிலையில் இந்த முறை விஜயின் தலையீடு பெரிய தலைவலியாக அந்த கட்சிகளுக்கு மாறியிருக்கிறது. இலவச திட்டங்களையும் சலுகைகளையும் மாறி மாறி அந்த கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், விஜயும் பல திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் சற்று முன் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில நிர்வாகிகள் புஸ்லி ஆனந்த் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் பேசியதாவது, மற்ற கட்சிகளை போல பொய்யான வாக்குறுதிகளை தந்து தமிழக மக்களை நான் ஏமாற்ற மாட்டேன். எந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ அதை மட்டும்தான் சொல்வோம். அதே நேரத்தில் சொல்லாத பல திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றி காட்டுவோம். மக்களுக்கான ஒரு வெளிப்படையான ஆட்சியை தருவதே தவெக கட்சியின் நோக்கமாக உள்ளது.
மக்கள் பணத்தில் ஒரு பைசாவை கூட நான் தொட மாட்டேன். மக்களுக்காக மட்டுமே அவர்களுக்கு நன்றி கடன் செலுத்தவே நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதிமுக வில் 10 ஆயிரம் ரூபாய் கருணை தொகை தருகிறேன் என்றால் திமுகவில் 8 ஆயிரம் ரூபாய் டோக்கன் தருகிறேன் என்கிறார்கள். இப்படி ஒருவரை ஒருவர் காப்பியடித்து பொய்யான தேர்தல் வாக்குறுதியை தருகின்றனர்.
தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. நான் தமிழ்நாட்டு பெண்களிடம் இல்லத்தரசிகளிடம் ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் தினமும் வீட்டு வாசலில் கோலம் போடும் போது விசில் சின்னத்தை வரைந்து ஆதரவு கொடுங்கள். அது நம் கட்சிக்கு பெரிய பலமாக இருக்கும் என்று நடிகர் விஜய் பேசியிருக்கிறார்.





