நடிகர் விஜய் நடிப்பில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வருகிற 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. 2 தினங்களாக ஆன்லைன் புக்கிங் நடந்து வருகிறது. டிக்கெட் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்க கூடாது என த வெ க கட்சி தலைமை, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் தி கோட் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால் கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு காட்சி துவங்க அனுமதி கிடைத்துளளது. அதே போல் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் உச்சக்கட்ட விரக்தியில் உள்ளனர்.
விஜய் படங்களை பொருத்த வரை அவரது பாட்டு, நடனம் எப்போதுமே வேற லெவலில் இருக்கும். அவரது படங்களில் நடனமும், பாட்டும் ரசிகர்களை குதூகலிக்க வைக்கும். குறிப்பாக கில்லி பட பாடல்களை இப்போது கேட்டாலும் ரசிகர்கள் எழுந்து ஆரம்பித்து விடுகிறார்கள். போக்கிரி படப் பாடல்களும் ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும்.
விஜய்க்கு மாஸ் ஹிட் படங்களாக இருந்த படங்கள் மட்டுமின்றி அவரது தோல்வி படங்களில் கூட பாடல் காட்சிகள் ஹிட் ஆகும். ஏனெனில் விஜயின் அற்புத நடனங்கள் அந்த படத்தில் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருக்கும். உதாரணமாக சுறா, அழகிய தமிழ் மகன், குருவி படங்கள் பிளாப் ஆனாலும், அந்த படங்களின் பாடல்களை ரசிகர்கள் ரசிக்க காரணம், விஜயின் நடனம்தான்.
ஆனால் தி கோட் படத்தில் இதுவரை 4 பாடல்கள் வெளியான நிலையில், பாடல்களை கேட்ட ரசிகர்கள், உதடு பிதுக்கி தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். விசில் போடு, சின்ன சின்ன கண்கள், நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு பாடல்கள் மொக்கை வாங்கிய நிலையில், நேற்று மாலை வெளியான 4 வது சிங்கிளும் அட போங்கப்பா என்ற எரிச்சலை தான் ரசிகர்களுக்கு தந்திருக்கிறது.
தி கோட் படத்தை பொருத்த வரை, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களை திருப்திபடுத்த மறந்துவிட்டார். அவரது இசை பெரிய உற்சாகத்தை தரவில்லையே என்று ரசிகர்கள் புலம்புகின்றனர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் வெங்கட்பிரபு, தி கோட் படத்தின் கதையை நான் விஜயிடம் சொன்ன போது, இசையமைப்பாளர் குறித்து எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அவரே வெங்கட்பிரபு – யுவன் சங்கர் ராஜா காம்பினேஷன் சூப்பரா இருக்குமே என்று சொல்லி, அவரை புக் பண்ண சொன்னார், என்று தெரிவித்திருக்கிறார். தப்பு பண்ணீட்டாரே தளபதி என ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.





