நடிகர் விஜய் மேற்கொண்டு வரும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண பிரசாரம் தமிழக அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியிருக்கிறது. விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிற வரை நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் போல நடிகர் விஜயும் அரசியல் களத்துக்கு வந்த ஒருவராக தான் பலராலும் சாதாரணமாக பார்க்கப்பட்டார்.
ஆனால் விக்கிரவாண்டியில் திரண்ட மக்கள் கூட்டமும் அங்கு 48 நிமிடங்கள் விஜய் பேசிய ஆவேச அரசியல் பேச்சும் அரசியல் கட்சிகளை திடுக்கிட வைத்தது. அரசியல் எதிரி திமுக கொள்கை எதிரி பாஜக என்றும் அதிரடியாக பகிரங்கமாக அறிவித்த நடிகர் விஜய், 2026ம் ஆண்டில் தவெக ஆட்சியமைப்பது உறுதி என்றும் சவால் விட்டார்.
அடுத்து மதுரையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி நடந்த மாநாட்டிலும் திமுக பாஜக கட்சிகளை வெளுத்து வாங்கினார். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினை, மை டியர் அங்கிள் மை டியர் அங்கிள் என்று அழைத்து கலாய்த்தார். இது அரசியல் களத்தில் மேலும் அனல் கக்கியது. திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கும் நடிகர் விஜய் மீது திமுகவினர் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
இப்போது மாவட்டம் வாரியாக மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தவெக தலைவர் நடிகர் விஜய் நாகை மற்றும் திருவாரூரில் நேற்று மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, என்ன அடக்குமுறை அரசியல் பண்ணி என்னை மிரட்டி பார்க்கறீங்களா சிஎம் சார். இந்த பூச்சாண்டி காட்ற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம். அதற்கு நான் ஆளில்லே. முடிஞ்சா கெத்தா தில்லா நேருக்கு நேரா எலக்ஷனுக்கு வாங்க, அங்க பார்த்துக்கலாம்.
குடும்பத்தோட கொள்ளையடிக்கிற உங்களுக்கே இவ்ளோ இருந்தா, சொந்த உழைப்பு சம்பாதிச்ச எனக்கு எவ்வளவு இருக்கும்? வெளிநாடுகளில் முதலீடு பண்றதா அடிக்கடி வெளிநாடு டூர் போறீங்களே? இது வெளிநாட்டில் முதலீடா, அல்லது உங்க குடும்பத்தின் சொத்துகள் வெளிநாட்டில் முதலீடா என்றும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியல் கட்சி துவங்கி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்த போது அன்று திமுக தலைவராக இருந்த கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா இருவர் குறித்தும் இதே போன்று கடுமையாக விமர்சனங்களை நேரடியாக பேசினார். இப்போது மீண்டும் நடிகர் விஜய் இப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து நேரடியாக அட்டாக் செய்து பேசி வருகிறார். இதற்கு திமுக என்ன பதில் தரப் போகிறது என்று தமிழக மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.





