தமிழ்நாட்டில் நடந்த இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்களை தான் பராசக்தி படம் பேசியிருக்கிறது. 1965ம் ஆண்டில் பொள்ளாச்சியில் நடந்த இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டம்தான் இந்த படம் என்று சொல்லப்படுகிறது. இந்தி ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டதற்கு எதிராக 1965ம் ஆண்டில் வெடித்த மொழிப்போர் போராட்டத்தின் உச்சமாக கருதப்படும் மாணவர் புரட்சி 50 நாட்கள் நடந்தது. இதை ஒடுக்க இராணுவம் களமிறக்கப்பட்டது.
கடந்த 1965 பிப்ரவரி 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தது. அன்று பொள்ளாச்சி நகரிலும் முழு கடையடைப்பு நடந்தது. அங்கிருந்த போஸ்ட் ஆபீஸ் முன்பு கூடிய மாணவர்களும் பொதுமக்களும் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். அப்போது 10ம் பத்தாம் வகுப்பு மாணவன் இந்தி ஒழிக என்று கோஷமிட்டபடி தபால் அலுவலக பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்த போது அங்கிருந்த ராணுவத்தினர் அந்த மாணவனை சுட்டுக்கொன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் கூட்டம் ராணுவத்தினரை நோக்கி கற்களை வீசியது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராணுவத்தினர் இயந்திர துப்பாக்கிகளால் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதால் பொள்ளாச்சி நகரமே போர்க்களமாக மாறியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழிந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். பொள்ளாச்சியை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.அறிவிக்கப்படாத ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.
ஏறத்தாழ 12 நாட்கள் பொள்ளாச்சி நகர ராணுவத்தினரிடம் இருந்தது. பொள்ளாச்சியில் அன்று நடந்த சந்தைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்களும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றனர். அதனால் உயிரிழந்தவர்கள் யார் யார் என்ற முழு விவரம் கூட கிடைக்கவில்லை. அந்த விவரங்களை சேகரிக்கவும் யாரையும் விடவில்லை. எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதும் மூடி மறைக்கப்பட்டது. இவை தொடர்பான கோப்புகள் அனைத்தும் எரிக்கப்பட்டன.
தெருவிலேயே கிடந்த சடலங்களை யாரும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.சடலங்களை எல்லாம் சேகரித்த ராணுவத்தினர் பொள்ளாச்சி பழனி சாலையில் உள்ள சுடுகாட்டில் புதைக்கவும் எரிக்கவும் செய்தனர். சுடுகாட்டை சுற்றிலும் ராணுவத்தினரும் போலீசாரும் துப்பாக்கியுடன் நின்று காவல் காத்தனர்.
பொள்ளாச்சி சுடுகாட்டில் எரிக்கப்பட்ட சடலங்கள் போக மற்றவை ராணுவ வண்டிகளில் ஏற்றப்பட்டு மதுக்கரை ராணுவ மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டன. அப்போது மக்களிடம் இருந்த அச்சம் காரணமாக தங்களது வீட்டில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை கூட அவர்கள் வெளிப்படுத்தவில்லை. உயிரைக் கொடுத்து தமிழ் மொழியை காத்த ஊர் என்ற பொள்ளாச்சி வரலாற்றில் நினைவு கோரப்பட்டு வருகிறது. இந்த உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டுதான் பராசக்தி படம் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





