தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 2024ம் ஆண்டில் துவங்கிய நடிகர் விஜய் 2 ஆண்டுகளே நிறைவடைந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கெொண்டு 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் அவர் மட்டும் பெரம்பூர் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியமைக்க மொத்தம் 118 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் 108 தவெக எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் காங்கிரஸ் தரப்பில் 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். மொத்தம் 113 எம்எல்ஏக்கள் தவெக வசம் உள்ள நிலையில் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் வேண்டும் என்று கவர்னர் மாளிகை விஜய்க்கு நெருக்கடி தந்துள்ளது.
ஆனால் தமிழக சட்டசபையில்தான் 118 எம்எல்ஏக்களின் ஆதரவை விஜய் நிரூபிக்க வேண்டும் என்கிற நிலையில் இப்போது ஆட்சியமைக்கவே 118 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும் என்று கவர்னர் மாளிகை விஜய்க்கு நெருக்கடி தர காரணம் பாஜக தான் என்று புகார் எழுந்துள்ளது. காங்கிரஸ் தவெகவுடன் இணைந்ததால் இப்படி சதி செய்வதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தென்னந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, கடந்த 2017-18ம் ஆண்டுகளில் கோவா மணிப்பூர் மேகாலயா மற்றும் மிக முக்கியமாக கர்நாடகாவில் நிகழ்ந்த அதே சூழலைப் போலவே இங்கும் அமைந்துள்ளது.
அங்கு அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, சட்டமன்றத்தில் நடைபெறும் “சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்” (Floor Test) மூலம் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோரப்பட்டது. அதே நடைமுறையைப் பின்பற்றி தளபதி விஜய் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை வழங்க தமிழக ஆளுநர் ஏன் தயக்கம் காட்டுகிறார்? மக்கள் தீர்ப்புக்கு என்ன மரியாதை இருக்கிறது?
233 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்க வேண்டிய நிலையில் தவெகவுக்கு பெரும்பான்மை ஆதரவளித்து மக்கள் தீர்ப்பளித்த நிலையில் நமக்கு தேவை ஒரு அரசாங்கம் தான். ஆளுநர் ஆட்சி அல்ல. அன்பிற்குரிய விஜய். நீங்கள் ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும். நிச்சயம் அமைப்பீர்கள். ஒரு வாக்காளனாக அதை உறுதிப்படுத்த நான் முன் நிற்பேன் என்று அந்த பதிவில் நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.





