தமிழகத்துக்கு, காவிரி நீரை திறந்துவிட மாட்டோம் என்ற முடிவில், கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது. தமிழகத்துக்கு எதிராக, அங்குள்ள கன்னட அமைப்புகள் கொடி பிடித்து, கோஷமிட்டு வருகின்றன. இதையொட்டி நேற்று கர்நாடகாவில் பந்த் நடத்தப்பட்டது. 44 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
தமிழ் நடிகர் சித்தார்த், தனது புதுப்படமான சித்தா படத்தின் கன்னடமொழி வெளியீடு, பிரமோசனுக்காக பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். பிரஸ் மீட் நடந்துக்கொண்டிருந்த போது அத்துமீறி அங்கே நுழைந்த கன்னட அமைப்பினர், சித்தார்த்துக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் அங்கிருந்து நிர்பந்தம் காரணமாக வெளியேறினார்.
பெங்களூருவில் நடந்த இந்த சம்பவத்துக்கு, தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து, கன்னட நடிகர்களின் மிக முக்கியமானவரான நடிகர் சிவராஜ்குமாரும், சித்தார்த்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக கூறி இருந்தார். இந்த சம்பவத்துக்கு வருத்தமும் கூறியிருந்தார்.
காவிரி நீர் பிரச்னையை தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரான பிரச்னையாக கர்நாடத்தில் உள்ள கன்னட அமைப்புகள் மாற்றியுள்ள நிலையில், தமிழ் சினிமா சார்ந்தவர்கள் தரப்பில் இருந்து, இதுவரை எந்த ரியாக்சனும் இல்லை. குறிப்பாக, நடிகர் சித்தார்த் பெங்களூரு நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட சம்பவத்துக்கு ஒரு கண்டனம் கூட எழவில்லை.
கர்நாடகாவில், இப்போதே தமிழ் படங்களை ஓட விட மாட்டோம் என்று கூற துவங்கியுள்ளனர். இந்த சூழலில், கர்நாடகாவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தால், அங்கு வெளியாகும் நமது படங்களுக்கு சிக்கல் வந்து விடுமே என்ற அச்சத்தில் தான் தமிழ் சினிமா நடிகர்கள் அடக்கி வாசிக்கின்றனர். இந்த விஷயத்தில், தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.
சமீபத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம், கன்னட மொழியில், அபார வசூலை புரிந்தது. அடுத்து விஜய் நடிப்பில், லியோவும் கன்னடத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. மற்ற தமிழ் நடிகர்களின் படங்களும் அடுத்தடுத்து கன்னடத்தில் வெளியாக உள்ளதால், வாய் திறந்தால், வருமானம் போய் விடுமே என்ற அச்சத்தில், தமிழ் சினிமா நடிகர்கள் கப்சிப் என, மவுனம் காத்து வருகின்றனர். இது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.





