தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி என்ற திரைப்பட நிறுவன தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி பிறந்த நடிகர் விஷாலுக்கு இப்போது 47 வயதாகிறது. இன்னும் அவர் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார்.
அவரது நெருங்கிய நண்பர்கள் நடிகர்கள் ரவி மோகன் சந்தானம் ஆர்யா ஜீவா திருமணமாகி செட்டில் ஆன நிலையில் விஷால் இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் வரும் நிலையில், எப்போது அவரது திருமணம் என்பது பெரிய கேள்வியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இப்போது அதற்கான பதிலை நடிகர் விஷால் தந்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் விஷால் கூறியதாவது, நடிகர் சங்க கட்டிடம் என் கனவு. அதனால் தான் கட்டிடம் கட்டிய பின்பு எனக்கு திருமணம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன். இதை நான் வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை. ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டேன்.
எப்படியும் 3 ஆண்டுகளில் கட்டுமான பணிகள் முடிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் 9 ஆண்டுகளை தாண்டிவிட்டது. நடிகர் சங்க கட்டிடம் முழுமை அடையும் நிலையில் இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். அநேகமாக வருகிற ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதத்தில் எனக்கு திருமணம் உறுதியாக நடக்கும்.
என் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதி கூட எனக்கு திருமணம் நடக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும். நான் திருமணம் செய்ய போகும் பெண் யார் என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன்.
ஒரு மாதமாக தான் அந்த பெண்ணை நான் காதலித்து வருகிறேன். விரைவில் நல்ல தகவல் சொல்கிறேன். பெண் பார்த்து விட்டோம். பேசி முடித்து விட்டோம். இது காதல் திருமணம் தான் என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார். பல ஆண்டுகளாக விஷாலின் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்து விட்டது. ஆனால் அவரும் நடிகையா, இல்லையா என்பதில்தான் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.





