தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்தாண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து வருகிற ஜூன் 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த தக்லைப் படம் வெளியாக உள்ளது. திரிஷா சிம்பு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகிறது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை அமெரிக்காவில் தங்கியிருந்த நடிகர் கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் குறித்த 90 நாட்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்று திரும்பியுள்ளார். இனி அவர் நடிக்கும் படங்களில் ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் உள்ளது. நடிகராக ஜொலித்த கமல், அரசியல்வாதியாக பெரிய வரவேற்பை பெறாதது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே, எவ்வித அச்சமும் பதற்றமும் இல்லாமல் துணிச்சலுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.
உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை இந்திய மாநிலங்களிலேயே அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அந்த பெருமையை உயர வைப்பதில் உங்கள் பங்கும் உள்ளது. அருமையாக தயாராகி இருப்பீர்கள். உங்கள் உழைப்பின் பலனை அறுவடை செய்யும் காலம் இது.
தேர்வை சிறப்பாக செய்வதில் மட்டுமே உங்கள் முழு கவனமும் இருக்கட்டும். முடிவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது நல்வாழ்த்துகள் என்று நடிகர் கமல்ஹாசன் அந்த பதிவில் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





