நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் அவர் பதவி வகிக்கிறார். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பிறகுதான் எனது திருமணம் நடக்கும். அதுவும் நடிகர் சங்க கட்டிட மண்டபத்தில்தான் நடக்கும் என்று நடிகர் விஷால் உறுதி அளித்திருந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி அது நிறைவேறப் போகிறது.
சில தினங்களுக்கு முன் என் திருமணம் முடிவாகி விட்டது. இன்னும் 4 மாதங்களில் என் திருமணம் நடப்பது உறுதி. நான் ஒரு மாதமாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். எங்கள் பெற்றோர் பேசி திருமணத்தை முடிவு செய்துவிட்டனர் என்று நடிகர் விஷால் கூறிய நிலையில், மணப்பெண் யார் என்பதில் ரசிகர்களிடையே சஸ்பென்ஸ் நீடித்தது. நேற்றிரவு சென்னையில் நடந்த யோகிடா பட விழாவில் மணப்பெண் யார் என்ற உண்மை வெளியானது.
நடிகை சாய் தன்ஷிகா தான் என்னுடைய வருங்கால மனைவி என்று நடிகர் விஷாலும், அதே மேடையில் நடிகை சாய் தன்ஷிகாவும் எனக்கும் விஷாலுக்கும் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி அவரது பிறந்த நாளில் திருமணம் நடக்க முடிவாகி உள்ளது என்பதை வெட்கப்பட்டுக் கொண்டே அறிவித்தார்.
விஷால் சாய் தன்ஷிகா இருவரும் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்காத நிலையில் இவர்களுக்குள் எப்படி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது என்பதுதான் ரசிகர்களின் ஆச்சரியமாக உள்ளது. ஏற்கனவே நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் லட்சுமி மேனன் நாடோடிகள் பட நடிகை அபிநயா போன்றவர்களுடன் நடிகர் விஷால் காதல் வயப்பட்டதாக கூறிய நிலையில், இறுதியாக சாய் தன்ஷிகாவை விஷால் கரம் பிடிக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் யோகிடா பட விழாவில் பேசிய நடிகர் விஷால், பேச்சின் இடையிடையே தனது வருங்கால மனைவியை கலாய்த்து தள்ளி விட்டார். தொடர்ந்து விழாவில் நடிகர் விஷால் பேசியதாவது, தன்ஷிகாவிடம் நான் கொஞ்சம் சூதானமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். தலை வரை கிக் வருகிறது. பாண்டியன் மாஸ்டரிடம் சென்று அதை பிளாக் செய்வது எப்படி என கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
விஜயசாந்திக்கு பிறகு தன்ஷிகா தான் சிறப்பாக சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். நான் ஆக்சன் ஹீரோ என சும்மா சொல்லிக் கொண்டிருக்கிறேன். எங்க வீட்டுக்கு செக்யூரிட்டி தேவையில்லை. நாங்க ரெண்டு பேரும் தான் செக்யூரிட்டி என்று நடிகை தன்ஷிகா குறித்து கலாய்த்தார். யோகிடா படத்தில் பிரதான கேரக்டரில் நடித்துள்ள சாய் தன்ஷிகா சண்டை காட்சிகளில் நடித்ததையே நடிகர் விஷால் கலாய்த்து அப்படி பேசியிருக்கிறார்.





