தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னையில் நடந்தது. இதில் 950க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பொதுச் செயலாளர் விஷால் பொருளாளர் கார்த்தி துணை தலைவர்கள் பூச்சி முருகன் கருணாஸ் உள்ளிட்டோர் விழாவில் முன்னிலை வகித்தனர்.
முதலில் 2025ம் ஆண்டில் மறைந்த நடிகை சரோஜாதேவி நடிகர்கள் ராஜேஷ் ரோபோ சங்கர் மனோஜ் பாரதி டெல்லி கணேஷ் உள்ளிட்ட 70 சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் சங்க பொதுக்குழுவில் பழம்பெரும் நடிகை எம் என் ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் தேசிய விருது அறிவிக்கப்பட்ட நடிகை ஊர்வசி நடிகர் எம்எஸ் பாஸ்கர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் ஆகியோர் இந்த கூட்டத்தில் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சமூக வலைதளங்களில் நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதூறாக பேசிய சிலர் மீது போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்னும் அது தீவிரமாகும். தென்னிந்திய நடிகர் சங்கம் புது கட்டிட திறப்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும். தாதா சாகிப் பால்கே விருது பெற்ற நடிகர் மோகன்லால் பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜீத்குமார் மற்றும் தேசிய விருது பெறுபவர்களுக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கூறியதாவது, பேச்சுலராக இது என்னுடைய கடைசி பொதுக்குழு கூட்டமாகும். நடிகர் சங்க கட்ட திறப்பு விழா முடிந்தவுடன் என்னுடைய திருமணம் நடக்கும். இப்போது ஆக்ரோஷமாக பேசுவதில்லை. அனைவரையும் நான் அரவணைத்து செல்கிறேன்.
எங்கள் உழைப்பின் பலனாக புதிய சங்க கட்டிடம் இருக்கும்.நடிகர் சங்க கட்டிடம் கட்ட பலரும் உதவி செய்து வருகிறார்கள். எந்த நடிகர் நடிகையிடமும் இவ்வளவு பணம் கொடுங்க என்று நாங்கள் கேட்க முடியாது. நாங்கள் ஆசிரியர்கள் அல்ல. அவர்கள் கொடுப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பணம் வாங்காமல் கலை நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள். அதுவே பெரிய உதவிதான் என்றார்.
இன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழுவில் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத் குமார் விக்ரம் சூர்யா சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் யாரும் வழக்கம் போல் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கும் இன்று ஞாயிறு தினமாக இருந்தும் வீட்டில் ஓய்வில் இருந்தும் நடிகர் சங்க பொதுக்குழுவை அவர்கள் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.





