தமிழ் சினிமாவில் எப்போதுமே காமெடி படங்களுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. முழுநீள நகைச்சுவை படம் என்றே பல படங்கள் முன்பு வெளிவந்து கொண்டிருந்தன. இதில் லாஜிக் இல்லாவிட்டாலும் படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்கும் விதமான காமெடி காட்சிகளும், கதையம்சமும் இருக்கும். இம்சை அரசன் 23ம் புலிகேசி சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்கள் முழுநீள காமெடி படங்களாக இருந்தன.
கடந்த 2002ம் ஆண்டில் சுந்தரா டிராவல்ஸ் என்ற காமெடி படம் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்றது. நடிகர் முரளி அறிமுக நடிகை ராதா வடிவேலு பி வாசு இளவரசு வினுச்சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஓட்டை பஸ்சை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது.
மலையாளத்தில் வெளிவந்த ஈ பறக்கும் தளிகா என்ற படத்தின் ரீமேக் தான் தமிழில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் படமாகும். மலையாளத்தில் ஈ பறக்கும் தளிகா படத்தை இயக்கிய இயக்குனர் தாஹா தமிழிலும் இந்த படத்தை அவரே இயக்கினார். இந்த படத்தில் இடம்பெற்ற முரளி வடிவேலு காமெடிக்காகவே இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆனது.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக சுந்தரா டிராவல்ஸ் படம் 2ம் பாகம் உருவாகிறது என்று கூறப்பட்ட நிலையில் இப்போது சுந்தரா டிராவல்ஸ் படத்தின் 2ம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுந்தரா டிராவல்ஸ் படத்தை இயக்கிய தாஹா இந்த படத்தை இயக்கவில்லை. இந்த 2ம் பாகத்தை இயக்குனர் கருப்பு தங்கம் என்பவர் டைரக்ட் செய்ய உள்ளார். இந்தப் படத்தில் கருணாஸ் கருணாகரன் இருவரும் முதன்மை கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் செவன்த் சேனல் தயாரிப்பாளர் நாராயணன் நடிகராக அறிமுகம் ஆகிறார். கொடைக்கானல் பன்றிமலை உள்ளிட்ட அடர்ந்த வனப் பகுதிகளிலும் தென்காசி காரைக்குடி சென்னை நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளிலும் சுந்தரா டிராவல்ஸ் படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சுந்தரா டிராவல்ஸ் முதல் பாகத்தில் நடிகர் முரளி நடிகர் வடிவேலு நடித்திருந்த அதே கதாபாத்திரங்களில் 2ம் பாகத்தில் நடிகர்கள் கருணாஸ் கருணாகரன் இருவரும் இணைந்து நடித்திருப்பதாக தெரியவந்துள்ளது. முதல் பாகத்தை போல இரண்டாம் பாகம் சுந்தரா டிராவல்ஸ் பெரிய வெற்றியை, வரவேற்பை ரசிகர்களிடம் பெறுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.





