பசியால் தவிப்பவர்களுக்கு உணவையும், நோயால் தவிப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும், ஆதரவற்று தவிப்பவர்களுக்கு உதவுவதும் தான் மனித நேயம். பல சிக்கலான நேரங்களில் உதவுவது மனிதர்கள் அல்ல, அந்த ரூபத்தில் வந்த கடவுள்தான் என்று பலரும் உருக்கமாக கூறுவதுண்டு. உதவி என்பதே கடவுளின் ரூபம்தான் என்றும் பலர் சொல்வதுண்டு.
சமீபத்தில் கேரளம் வயநாடு முண்டகாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரவில் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை, உறவுகளை இழந்து நிர்கதியாக தவிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி சார்ந்த நடிகர், நடிகையர் பலரும் வயநாடு நிலச்சரிவு சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து, நிவாரண தொகைகளை அளித்து வருகின்றனர். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண் சார்பாக ரூ. 1 கோடி அளித்துள்ளனர். மலையாள நடிகர் மோகன்லால் ரூ. 3 கோடி அளித்துள்ளார்.
தமிழ் சினிமா சார்ந்த நடிகர் கமல்ஹாசன் ரூ. 25 லட்சம், சூர்யா – ஜோதிகா தரப்பில் ரூ. 50 லட்சம் நிவாரண தொகை வழங்கியுள்ளனர். அதே போல் நடிகர் சியான் விக்ரம் ரூ. 20 லட்சம் தந்துள்ளார். இதே போல் நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜூன், மம்முட்டி, துல்கர் சல்மான், பகத் பாசில், நஸ்ரியா, டோனிவோ தாமஸ், ஆஸிப் அலி உள்ளிட்ட பலர் நிவாரண தொகை வழங்கியுள்ளனர்.
ஆனால் கேரளாவில் பல லட்சக்கணக்கான தமிழ் சினிமா ரசிகர்கள் உள்ளனர். தமிழ் நடிகர் நடித்த படங்கள் கேரளாவில் ரிலீஸ் ஆகும்போது அங்கிருந்தும் பல கோடிகள் இந்த படங்களுக்கு கணிசமாக வசூலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கேரளாவில் ஏற்பட்ட இந்த கொடூர சம்பவத்துக்கு நிவாரணத் தொகை வழங்க பல முன்னணி நடிகர்கள் முன்வரவில்லை.
கேரளாவில் தொடர்ந்து அதிக வசூலை பெற்று வரும் தமிழ்பட நடிகர்கள் எந்த நிவாரண தொகையும் வழங்காமல் கமுக்கமாய் இருப்பது குறித்து, பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெரிய அளவில் அள்ளிக் கொடுக்காவிட்டாலும், கிள்ளி கொடுத்தாலும் அதுவும் பெரிய உதவிதான் என்றும் கூறி வருகின்றனர். கலைக்கும், கலைகளுக்கும் இனம், மொழி பேதமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல், இப்படி கண்டுகொள்ளாமல் நடந்துக்கொள்வது நிழல் ஹீரோக்களுக்கு அழகல்ல என்றும் விமர்சிக்க துவங்கியுள்ளனர்.





