தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் கடந்த ஜூலை 10-ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தற்போது முதல் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கணவர் மற்றும் தந்தை ஆகியோருடன் கலந்து கொண்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் வரலட்சுமி சரத்குமாரின் கணவர் நிக்கோலாய் பேசியபோது : எல்லோரும் இங்கு வந்ததற்கு நன்றி. நான் இப்போதுதான் தமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன். தற்போதைக்கு எனக்கு தண்ணீர், சாப்பாடு, பொண்டாட்டி ஆகிய வார்த்தைகள் மட்டும் தான் தெரியும். கூடிய சீக்கிரம் முழுமையாக கற்றுக் கொள்வேன்.
மும்பை இனிமேல் என் வீடு கிடையாது. சென்னை தான் என்னுடைய வீடு. திருமணத்திற்கு பிறகு வரலட்சுமி சரத்குமார் அவரது பெயரை மாற்றிக்கொள்ள தேவையில்லை. நான் வேண்டுமென்றால் என் பெயரை நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என மாற்றிக் கொள்கிறேன். அவர் எப்போதுமே வரலட்சுமி சரத்குமாராகவே இருக்கட்டும்.
நான் அவருடைய முதல் காதல் இல்லை எப்போதுமே சினிமா தான் அவருக்கு முதல் காதல் எனவே திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார். உங்கள் அன்பும் ஆதரவும் நிச்சயம் அவருக்கு வேண்டும் என நிக்கோலாய் பேசியிருந்தார்.
பின்னர் பேசிய வரலட்சுமி சரத்குமார் கூறுகையில் : நீங்கள் எல்லோரும் இங்கு வந்ததற்கு நன்றி. எனது கணவர் சொன்னது போல என்னுடைய முதல் காதல் அவர்தான். ஆனால் என்னுடைய உயிர் சினிமா தான். எனவே திருமணத்திற்கு பிறகும் கண்டிப்பாக நடிப்பேன் என்னை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி என வரலட்சுமி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பேசிய நடிகர் சற்தகுமார் : வரலட்சுமி தான் எங்களுக்கு நிகோலாய்யை அறிமுகம் செய்து வைத்தார். அவரை பார்த்ததுமே எங்கள் குடும்பத்திற்கு பிடித்து விட்டது. அவர்கள் இருவருக்கும் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என சரத்குமார் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.





