சினிமா என்ற வார்த்தையை உச்சரித்ததும் பெரும்பாலான ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது சினிமா தியேட்டர்கள்தான். அதன்பிறகு எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் என நடிகர்கள் நினைவுக்கு வருவார்கள். சினிமா என்பதை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்வதே சினிமா தியேட்டர்கள்தான்.
டெண்டு கொட்டகைகளில் தரையில் மணல் குவித்து அதன் மீது அமர்ந்து சினிமா பார்த்த அந்த கால ரசிகர்களும் சரி, இன்று மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் நீண்ட சோபாக்களில் ஏஸியில் படுத்தபடி படம் பார்க்கும் ரசிகர்களும் சரி, தியேட்டர் அனுபவம்தான் அவர்களை சினிமா ஆர்வலர்களாக ரசிகர்களாக மாற்றியிருக்கிறது.
அதனால் சினிமாவில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள் அந்த காலத்தில் சொந்தமாக சினிமா தியேட்டர்கள் கட்டியிருக்கிறார்கள். அதே போல் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமாக கமலா தியேட்டர் சென்னையில் இருந்தது. இப்போதும் தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன் மகேஷ் பாபு போன்றவர்களுக்கு சொந்தமான மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டர்கள் பெங்களூரு ஐதராபாத் போன்ற நகரங்களில் இருக்கின்றன.
ஆனால் தமிழ் சினிமா ஹீரோக்களை பொருத்த வரை அவர்களுக்கு சொந்தமான சினிமா தியேட்டர்கள் இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கு சகல வசதிகளுடன் சொந்தமாக ஹோம் தியேட்டர் உள்ளது. ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் என அவர்களுக்கு அப்படி 30 பேர் 40 பேர் மட்டுமே பார்க்கும் தியேட்டர்கள் உள்ளன.
ஆனால் தன்னை வாழ வைத்த சினிமாவை போற்றும் விதமாக மக்கள் வந்து பார்க்கும் வகையில் இன்றைய ஹீரோக்கள் சினிமா தியேட்டர்களை சொந்தமாக கட்டவில்லை என்பதே உண்மை. ஒரு படத்தில் நடிக்க 50 கோடி ரூபாய் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அவர்கள் ஒரு படத்தின் சம்பளத்தை வைத்தே 2 மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை கட்டிவிட முடியும்.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, தன்னை வாழ வைத்த சினிமாவுக்கு மரியாதை செய்யும் விதமாக இன்றைய ஹீரோக்கள் யாரும் சினிமா தியேட்டர்களை கட்டுவது இல்லை. துபாயில் சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பில் பங்களா வாங்குகின்றனர். புதிதாக கட்சி ஆரம்பிக்கின்றனர். புதிய புதிய கார்களை வாங்குகின்றனர். ஆனால் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சினிமா தியேட்டர்களை கட்ட அதில் முதலீடு செய்ய அவர்கள் விரும்புவதே இல்லை என்று அதில் ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.





