ஆண்டுதோறும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாளில் மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்து வருகிறது. அதன்படி நேற்று பத்மஸ்ரீ பத்ம பூஷன் பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை அறிவித்தது. இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர் அஜீத்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
நடிகர் அஜீத்குமார் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி விளையாட்டிலும் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். கார் ரேஸ் பைக் ரேஸ் ரைபிள் சுடுதல் என போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார். இப்போது துபாயில் நடந்து வரும் கார் ரேஸில் அஜீத்குமார் கார் ரேஸிங் அணிக்கு தலைவராக இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் இதுவரை 40க்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் கலை சார்ந்த பிரிவில் பத்ம பூஷன் விருதுகளை பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவில் இதுவரை இசையமைப்பாளர் இளையராஜா ஏஆர் ரகுமான் கவிஞர் வைரமுத்து பாடகர்கள் கே ஜே ஜேசுதாஸ் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஆகியோர் பத்ம பூஷன் விருதுகளை பெற்றுள்ளனர்.
இதே விருது பெற்றோர் வரிசையில் பாடகிகள் பி சுசீலா பானுமதி ராமகிருஷ்ணா குமாரி கமலா எம் எஸ் சுப்புலட்சுமி என பலர் பத்மபூஷன் விருதுகளை பெற்றுள்ளனர். தமிழ் சினிமா நடிகர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் நடிகர் விஜயகாந்த் ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் நடிகர் விஜயகாந்துக்கு அவர் மறைவிற்குப் பிறகு கடந்த ஆண்டில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு பிறகு அவரது மனைவி பிரேமலதாவிடம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சீனியர் நடிகர்கள் சிவாஜிகணேசன் ரஜினி கமல்ஹாசன் விஜயகாந்த் ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் பத்ம பூஷன் விருது பெறும் நடிகராக இருக்கிறார்.
நடிகர் அஜித்குமார் தமிழக அரசின் கலைமாமணி விருது 2000 ஆண்டில் பெற்றார். 2006ம் ஆண்டில் எம்ஜிஆர் விருதும் அஜீத் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 3 முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை அஜீத் குமார் பெற்றுள்ளார். மேலும் சில சினிமா விருதுகளையும் நடிகர் அஜீத்குமார் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





